Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/குடிநீர் பரிசோதனை செய்வதில் உள்ளாட்சிகளில் ஆர்வம் இல்லை தரமற்ற நீரை பருகும் மக்கள் பாதிப்பு

குடிநீர் பரிசோதனை செய்வதில் உள்ளாட்சிகளில் ஆர்வம் இல்லை தரமற்ற நீரை பருகும் மக்கள் பாதிப்பு

குடிநீர் பரிசோதனை செய்வதில் உள்ளாட்சிகளில் ஆர்வம் இல்லை தரமற்ற நீரை பருகும் மக்கள் பாதிப்பு

குடிநீர் பரிசோதனை செய்வதில் உள்ளாட்சிகளில் ஆர்வம் இல்லை தரமற்ற நீரை பருகும் மக்கள் பாதிப்பு

ADDED : ஜன 07, 2024 07:13 AM


Google News
போடி: தேனி மாவட்டத்தில் பல உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் மற்றும் ஆழ்குழாய் நீரை பரிசோதனை செய்வதில் ஆர்வமில்லாததால் தரமில்லாத நீரை பருகும் மக்களுக்கு நோய்கள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

குடிநீரில் பல்வேறு உப்புகள் கரைந்துள்ளன. இவை குறிப்பிட்ட சதவிகிதத்தில் இருந்தால் பருகும் நபர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது. மாறாக அதன் விகிதம் மாறுபாடும் போது அந்த நீரை பருகுவோருக்கு பல்வேறு நோய்களை ஏற்படுத்தும்.

குறிப்பாக புளுரைடு அதிகம் உள்ள நீரை தொடர்ந்து பருகினால் பல், எலும்பு பாதிப்பு, சளி, தொண்டையில் நீர் கட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் பரிசோதனை மையம் வைகை அணையில் உள்ளது.

குடிநீர் பரிசோதனைக்கு ரூ.2600 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பரிசோதனைக்கான நீரை 3 இடங்களில் தலா ஒரு லிட்டர் வீதம் பிடித்து பாட்டிலில் அடைத்து வழங்க வேண்டும். பரிசோதித்த மூன்று நாட்களில் முடிவு வழங்கப்படும்.

ஆனால் பல உள்ளாட்சிகளில் முறையாக குடிநீரை பரிசோதிப்பது இல்லை. நீரை தொட்டிகளில் ஏற்றி, பெயரளவில் குளோரினேசன் செய்து வினியோகித்து விடுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் ஊராட்சிகளிலே குடிநீரை பரிசோதிக்கும் 'கிட்' வழங்கி பரிசோதிக்க பயிற்சியும் அளித்தனர். சில மாதங்கள் பயன்பாட்டில் இருந்தது. பின்னர் அவை இருந்த இடம் தெரியாமல் போனது. ஆண்டுக்கு 2 முறை குடிநீர் பரிசோதனை செய்வது அவசியம். ஆனால் பல ஊராட்சிகளில் பரிசோதனை செய்வது இல்லை.

குடிநீர் தொட்டிகளை ஆண்டுக்கு ஒருமுறை கூட சுத்தம் செய்வது இல்லை. தரமில்லாத நீரை பருகுவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி தெரிந்து அதனை சரி செய்ய ஆர்வம் காட்டுவது இல்லை. நிலத்தடி நீர், கோடை, மழை காலத்தில் மாறும் தன்மை கொண்டவை. சமீபத்தில் பெய்த மழையால் நீரின் தன்மையில் மாற்றம் ஏற்படும் இதனால் குடிநீர் பரிசோதனை செய்ய ஊராட்சி நிர்வாகங்கள் ஆர்வம் காட்டாமல் உள்ளன.

எனவே. ஆண்டிற்கு 2 முறை குடிநீர் பரிசோதனை செய்வதன் அவசியத்தை உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு குடிநீர் வாரியம், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி பரிசோதித்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us