/உள்ளூர் செய்திகள்/தேனி/ முழுமை பெறாத ரோடு அகலப்படுத்தும் பணி கூடலுார் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம் முழுமை பெறாத ரோடு அகலப்படுத்தும் பணி கூடலுார் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
முழுமை பெறாத ரோடு அகலப்படுத்தும் பணி கூடலுார் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
முழுமை பெறாத ரோடு அகலப்படுத்தும் பணி கூடலுார் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
முழுமை பெறாத ரோடு அகலப்படுத்தும் பணி கூடலுார் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
ADDED : செப் 21, 2025 12:29 AM

கூடலுார்: கூடலுார் மாநில நெடுஞ்சாலையில் ரோடு விரிவாக்க பணி முழுமை பெறாததால் விபத்து அபாயம் உள்ளது.
கூடலுார் நகராட்சி கேரள எல்லையில் உள்ளது. இதனால் வாகனப் போக்குவரத்து அதிகம். கேரளாவிலிருந்து தினமும் காய்கறி, மளிகைப் பொருட்கள் வாங்க ஏராளமான கேரள மக்கள் வருகின்றனர்.
வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தெற்கு மந்தை வாய்க்கால் வரை நகர்ப்பகுதியில் உள்ள 4 கி.மீ., தூர ரோடு மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. புறவழிச்சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த போதிலும் நகர்ப் பகுதியில் வாகனப் போக்குவரத்து எண்ணிக்கை குறையவில்லை.
4 கி.மீ., தூர மாநில நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி 2022 ஏப்ரலில் துவங்கியது. இடையூறாக இருந்த 200க்கும் மேற்பட்ட மரங்கள்அகற்றப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் அகற்றி மாற்று இடத்தில் வைக்கப்பட்டன. ஆனால் தனியார் ஆக்கிரமிப்புகள் மட்டும் முழுமையாக அகற்றவில்லை.
மூன்று இடங்களில் பாலம் அகலப்படுத்தும் பணி நடந்தது. அதில் பெட்ரோல் பங்க் அருகே கூலிக்காரன் பாலம் ஓடையில் பாலம் அகலப்படுத்தும் பணி தாமதமாக துவங்கி நடந்து முடிந்தது. ஆனால் அப்பகுதியை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் 'பேரி கார்டு' வைத்து தடுத்துள்ளனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் இப்பகுதியில் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன.
அமைக்கப்பட்ட சென்டர் மீடியன்களும் ஆங்காங்கே எவ்வித அனுமதியும் பெறாமல் உடைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை.
முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சாலை அமைக்கும் பணி நடந்ததால் அகற்றப்பட்ட பல இடங்களில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
தார் சாலையிலேயே வீடு, கடைகளில் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர்.
இருவழிச்சாலையாக அகலப்படுத்தப்பட்ட போதிலும் ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய வகையில் உள்ளது. இதனால் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விபத்து அபாயத்தை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.