Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்! பயணிகளை கவர திட்டம் இல்லை

சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்! பயணிகளை கவர திட்டம் இல்லை

சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்! பயணிகளை கவர திட்டம் இல்லை

சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்! பயணிகளை கவர திட்டம் இல்லை

ADDED : ஜூலை 06, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
கம்பம் : தேனி மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி, மேம்பாடு, சுற்றுலா பயணிகளை கவர்வது போன்ற நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து சுணக்கம் காட்டி வருவதால் சுற்றுலா தலங்கள் கவனிப்பின்றி உள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளர்.

நமது மாவட்டத்திற்கு மிக அருகாமையில் உள்ள கேரள மாநிலத்தில் சுற்றுலா தொழில் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. அம் மாநில அரசும் சுற்றுலா மேம்பாட்டில் தனி கவனம் செலுத்துகிறது.

ஆனால் இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே சுருளிஅருவி, மேகமலை, கும்பக்கரை அருவி பகுதிகளை சுற்றுலா தலங்களாக அறிவித்தனர். மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் சுருளி அருவி, மேகமலைக்கு விரும்பி செல்கின்றனர்.

சுற்றுலாவை மேம்படுத்த ஆண்டுதோறும் சுருளி அருவியில் நடத்தப்பட்டு வந்த சாரல் விழா சில ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. கடந்த ஆண்டு நடத்தப்பட்டது.

ஆனால் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகளான கார் பார்க்கிங், தங்கும் விடுதி, ஒட்டல்கள், கழிப்பறை, பூங்கா, உடை மாற்றும் அறை என எதுவும் இல்லை. அருவிக்கு செல்லும் ஒரு கி.மீ. தூரமுள்ள ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. முதியவர்கள், குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.

இங்கு பயன்பாட்டில் இருந்த பேட்டரி கார் பழுதாகி முடங்கியுள்ளது. நுழைவு கட்டணம் என போட்டி போட்டு வசூல் செய்யும் சுருளிப்பட்டி ஊராட்சியும், வனத்துறையும் வசூல் செய்யும் பணத்தை என்ன செய்கின்றனர் என எந்த விபரமும் தெரியவில்லை.

மேகமலையில் சாரல் விழாவிற்கு விடை கொடுத்து விட்டனர். இங்கும் ஒட்டல், தேநீர் கடை, போக்குவரத்து, பார்க், படகு சவாரி என எதுவும் கிடையாது.

நுழைவு கட்டணம் என வனத்துறை வசூல் வேட்டை நடத்துகிறது. இதில் மதியம் 3 மணிக்குள் திரும்ப வேண்டும் என வனத்துறை செய்யும் கெடுபிடிக்கு அளவே இல்லை.

சூழல் சுற்றுலா என்று பெயருக்கு சொல்லும் வனத்துறை, சுற்றுலா மேம்பாடு பற்றி கண்டு கொள்வதே இல்லை.

மேகமலை புலிகள் காப்பகமாக மாறியதில் இருந்து வனத்துறையின் கெடுபிடியும் அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மிக மோசமான நிலையில் உள்ளது. இது பற்றி மாவட்ட நிர்வாகமும் கவனத்தில் கொள்வதில்லை.

மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, சுருளி, சின்ன சுருளி, கும்பக்கரை அருவிகள், வைகை அணை, மேகமலையில் போன்ற சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் வகையில் வசதிகளை செய்து தர வேண்டும்.

சுற்றுலா வளர்ச்சி அடைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us