Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆக்கிரமிப்பால் தாசன் செட்டிகுளத்தில் மழை நீரை தேக்க முடியாத சோகம் அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு

ஆக்கிரமிப்பால் தாசன் செட்டிகுளத்தில் மழை நீரை தேக்க முடியாத சோகம் அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு

ஆக்கிரமிப்பால் தாசன் செட்டிகுளத்தில் மழை நீரை தேக்க முடியாத சோகம் அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு

ஆக்கிரமிப்பால் தாசன் செட்டிகுளத்தில் மழை நீரை தேக்க முடியாத சோகம் அணைக்கரைப்பட்டி விவசாயிகள் பரிதவிப்பு

ADDED : செப் 18, 2025 06:26 AM


Google News
Latest Tamil News
போடி : போடி அருகே தாசன்செட்டிகுளத்திற்கு நீர்வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பால் மழைக் காலங்களில் வரும் நீரை முழுவதுமாக குளத்தில் தேக்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 50 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தாசன் செட்டிகுளம். இதற்கு மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீர் குரங்கணி, கொட்டகுடி, அணைப்பிள்ளையார் அணை பகுதியில் இருந்து வரும் மழை நீர் சத்திர விநாயகர் வாய்க்கால், ராஜ வாய்க்கால் வழியாக நீர் வருகிறது.

மேலும் பங்காருசாமி நாயக்கர் கண்மாயில் நிரம்பியவுடன் இக் குளத்திற்கு தண்ணீர் வரும். குளத்தில் நீர் தேங்குவதன் மூலம் 500 ஏக்கர் நேரடியாகவும், 200 ஏக்கருக்கு மேல் மறைமுக பாசன கிணறுகளின் நீரூற்றும் கிடைத்தது. தற்போது மழைநீரை தேக்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

ரூ. ஒரு லட்சத்தில் சீரமைத்தும் பயன் இல்லை பூங்கொடி, அணைக்கரைப்பட்டி: இக் குளத்தில் நீர் தேங்குவதன் மூலம் அணைக்கரைப்பட்டி, துரைராஜபுரம் காலனி பகுதி விவசாயிகள் பயன் பெறுவார்கள். குளம் தூர்வாரி பல ஆண்டுகள் ஆனதால் முட்செடிகள் மரங்களாக வளர்ந்து மழை நீரை தேக்க முடியாத நிலை உள்ளது. கொட்டகுடி ஆற்றில் இருந்து கண்மாய்க்கு நீர் வரும் பாதையான அணைப்பிள்ளையார் அணை பகுதி, இலந்த தோப்புகள், சத்திர விநாயகர் வாய்க்கால், சன்னாசிபுரம் சின்ன வாய்க்கால் வழியாக 3 கி.மீ., தூரம் உள்ள ஆற்றுப் பகுதியின் இருபுறமும் தனி நபர்கள் தென்னை, இலவம் மரங்கள் வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் நீர் வரும் பாதை அடைபட்டுள்ளது.

கொட்டகுடி ஆற்றில் இருந்து குளத்திற்கு வரும் வாய்க்கால் முழுவதும் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. இதனால் தாசன் செட்டிகுளத்தில் மழைநீரை தேக்க முடியாமல் வறண்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கிராம கமிட்டி மூலம் ரூ. ஒரு லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைக்கப்பட்டது.

ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால் குளத்திற்கு நீர் வரவில்லை. கொட்டகுடி ஆற்று பகுதியிலிருந்து தாசன் செட்டிகுளம் வரை முறையாக சர்வே செய்து ஆக்கிரமிப்பு அகற்றிடவும், மழை நீரை முழுவதும் தேக்கிட நீர்வளத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாய்க்கால் ஆக்கிரமிப்பு அதிகம் போத்திராஜ், பி.அணைக்கரைப்பட்டி: இக் குளம் தூர்வாரி பல ஆண்டுகளுக்கு மேலானதால் முள் மரங்களாக வளர்ந்துள்ளன. இதனால் மழைக் காலங்களில் கூட நீரை முழுவதும் சேமிக்க முடியாமல் வறண்டு உள்ளது.

கண்மாய் பகுதியை தனி நபர்கள் ஆக்கிரமித்து கரும்பு, இலவம் விவசாயம் செய்து வருகின்றனர். கொட்டகுடி ஆற்றில் இருந்து தாசன் செட்டிகுளம் வரை இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட மாவட்ட நிர்வாகத்திடம் விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

கண்மாய் பகுதியில் வளர்ந்துள்ள முட்செடிகள், நீர் வரும் பாதையான வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆழப்படுத்தி தூர்வாரி, மழை நீரை தேக்கிட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us