Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் அதிக மகசூல் தரும் புதிய ரகம் வேண்டும்

வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் அதிக மகசூல் தரும் புதிய ரகம் வேண்டும்

வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் அதிக மகசூல் தரும் புதிய ரகம் வேண்டும்

வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் அதிக மகசூல் தரும் புதிய ரகம் வேண்டும்

ADDED : ஜன 07, 2024 07:06 AM


Google News
சின்னமனூர்: மாவட்டத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேளாண் பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

மாவட்டத்தில் பெரியகுளம் அருகே வடுகபட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், சின்னமனுார், மார்க்கையன்கோட்டை, கம்பம், கூடலூர், சீலையம்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் வெற்றிலை சாகுபடி பாரம்பரியமாக நடைபெறுகிறது.

சின்னமனூரில் கருப்பு வெற்றிலையும், பெரியகுளம் பகுதியில் வெள்ளை வெற்றிலை சாகுபடியாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பலன் தரும் வெற்றிலை கொடி நடவு செய்த 4 மாதங்களில் இருந்து பலன் பெறலாம். 25 நாட்களுக்கு ஒரு முறை வீதம் ஆண்டுக்கு 12 முறை வெற்றிலை பறிப்பார்கள்.

சின்னமனூரில் 500 ஏக்கரில் இருந்த சாகுபடி பரப்பு தற்போது 50 ஏக்கராக குறைந்துள்ளது. பெரியகுளம் பகுதியில் இன்றும் வெற்றிலை சாகுபடி பிரதானமாக உள்ளது. வட மாநிலங்கள், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு தினமும் லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.

தோட்டக்கலைப் பயிரான வெற்றிலையை தோட்டக்கலைத்துறை கண்டுகொள்வதில்லை. இதனால் வெற்றிலையை பாதிக்கும் நோய்கள், அதற்கான தீர்வுகள், நவீன தொழில்நுட்பங்கள், நாற்று கொடிகளுக்கு விவசாயிகள் அல்லாட வேண்டி உள்ளது.

பிற பயிர்களுக்கு வழங்கும் மானியம், தொழில்நுட்பம் வெற்றிலைக்கு தருவதில்லை. இதனால் பலர் வெற்றிலை சாகுபடியை கைவிட்டனர். இதனால் சாகுபடி பரப்பும் குறைந்து விட்டது.

வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், மருத்துவ குணமிக்க வெற்றிலை சாகுபடிக்கு அதிகாரிகள முக்கியத்துவம் தராததால் மாவட்டத்தில் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது.

மாவட்டத்தில் மீண்டும் வெற்றிலை சாகுபடி பரப்பை அதிகரிக்க அரசு வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைத்து புதிய ரகங்களை கண்டுபிடிக்க வேண்டும். பிற பயிர்களுக்கு தருவது போன்று மானியம், உரம், பூச்சி மருந்துகள், நவீன தொழில்நுட்பங்கள் வழங்க வேண்டும். அதிக மகசூல் தரும் புதிய ரகங்களை கண்டுபிடிக்க வேண்டும்.தற்போது ஏக்கருக்கு 500 கிலோ வெற்றிலை கிடைத்தாலும் கூடுதல் மகசூலுக்கு வீரிய ஒட்டுரக கொடிகள் கண்டு பிடிக்க வேண்டும். விலை வெள்ளை கிலோ ரூ.250, கருப்பு ரூ.180 க்கு கிடைக்கிறது.

இந்த விலை பரவாயில்லை. ஏற்றுமதி அதிகமாக அனுப்பும் போது இன்னமும் நல்ல விலை கிடைக்கும். எனவே வேளாண் பல்கலைக்கழகம் தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us