Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ நீர் தேங்காததால் விவசாயத்தை கைவிட்டு மண்ணை விற்கும் அவலம் தெப்பம்பட்டி கண்மாய்க்கு நீர் வரத்து இன்றி தரிசாகும் நிலங்கள்

நீர் தேங்காததால் விவசாயத்தை கைவிட்டு மண்ணை விற்கும் அவலம் தெப்பம்பட்டி கண்மாய்க்கு நீர் வரத்து இன்றி தரிசாகும் நிலங்கள்

நீர் தேங்காததால் விவசாயத்தை கைவிட்டு மண்ணை விற்கும் அவலம் தெப்பம்பட்டி கண்மாய்க்கு நீர் வரத்து இன்றி தரிசாகும் நிலங்கள்

நீர் தேங்காததால் விவசாயத்தை கைவிட்டு மண்ணை விற்கும் அவலம் தெப்பம்பட்டி கண்மாய்க்கு நீர் வரத்து இன்றி தரிசாகும் நிலங்கள்

ADDED : ஜூலை 03, 2025 12:18 AM


Google News
Latest Tamil News
ஆண்டிப்பட்டி:மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தெப்பம்பட்டி கண்மாயில் முழு அளவில் நீர் தேங்காததால் விளை நிலத்தில் உள்ள மண்ணை செங்கல் காளவாசலுக்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விளை நிலங்கள் தரிசாகும் நிலை உருவாகி உள்ளது.

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இக்கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை வடுவூத்து, வெள்ளப்பாறை ஓடைகள் வழியாக நீர் வரத்து கிடைக்கும். 50 ஏக்கர் பரப்புள்ள கண்மாயில் நீர் தேங்கினால் நேரடி பாசனத்தில் ஒரு போகமும், நிலத்தடி நீர் ஆதாரத்தில் மறு போகமும் விவசாயம் செய்து வந்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக கண்மாய்க்கு போதிய அளவில் நீர் வரத்து இல்லை. இதனைத் தொடர்ந்து நேரடி பாசன விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்மாயின் பள்ளங்களில் தேங்கும் நீரால் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு மட்டும் ஓரளவு நிலத்தடி நீர் கிடைக்கிறது.

விவசாயம் பாதித்ததால் அதனை சார்ந்துள்ள கால்நடை வளர்ப்பு தொழிலும் பாதிப்படைகிறது. வாழ்வாதாரம் பாதித்த விவசாயிகள் மாற்றுத் தொழில் தேடி வெளியூர் செல்கின்றனர். விவசாய நிலத்தில் மண்ணை விற்று செங்கல் காளவாசல் தொழிலை செய்கின்றனர். இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரத்தை கருத்தில் கொண்டு கண்மாயில் நீர் தேக்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

கண்மாய் குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

பாலை வனமாக மாறும் நிலை


பாண்டிச்செல்வம், ராசக்காள்பட்டி: கண்மாய் நீர்வரத்து கால்வாய்கள், ஓடைகள் கடந்த பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை. கண்மாயும் புதர் மண்டியுள்ளது. கண்மாய்க்கரைகள் மண் அரிப்பால் பாதித்துள்ளது. கண்மாயில் உள்ள புதர் செடிகளை அகற்றவும் கரையை உயர்த்தி பலப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் விவசாயத்தை கைவிட்டு, மண்ணை விற்று செங்கல் காளவாசல் தொழிலை செய்கின்றனர்.

இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் இப்பகுதி விவசாயம் இன்றி பாலைவனமாக மாறிவிடும். முல்லைபெரியாறு அணை உபரி நீரை குழாய் மூலம் கொண்டு வந்து ஆண்டிப்பட்டி பகுதி கண்மாய்களில் தேக்க இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்கின்றனர். செயல் வடிவம் தான் கிடைக்கவில்லை.

மண் வளம் இருந்தும் நீர் வளம் இல்லை


செல்லப்பாண்டி, டி. அழகாபுரி : கண்மாயில் ஒருமுறை முழு அளவில் நீர் தேங்கினால் இப்பகுதியில் மூன்றாண்டுகள் வரை நிலத்தடி நீர் சமன் செய்யப்படும். தற்போது நிலத்தடி நீர் பாதித்ததால் தெப்பம்பட்டி, சேவா நிலையம், சுந்தரராஜபுரம், சித்தார்பட்டி, ராஜதானி, ராமகிருஷ்ணாபுரம், அழகாபுரி உட்பட பல கிராமங்களில் விவசாயம் பாதித்துள்ளது. விவசாயம் பாதித்ததால் மண்வளத்தை பாதுகாக்க முடியவில்லை.

வாலுத்து ஓடை வழியாக வரும் நீரை கண்மாய்க்கு கொண்டுவர வேண்டும். மண் வளம் இருந்தும் நீர் வளம் இல்லாததால் விவசாயத்தை தொடர முடியாமல் பலரும் தவிக்கின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள கிராமங்களில் நிலத்தடி நீரை அதிகரிக்கவும் விவசாயத்தை பெருக்கவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us