Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ உவர்ப்பு நீரையே பருகுவதால் கல்லடைப்பு பாதிப்பு நல்லகருப்பன்பட்டியில் அடிப்படை வசதிகள் நல்லாயில்லை

உவர்ப்பு நீரையே பருகுவதால் கல்லடைப்பு பாதிப்பு நல்லகருப்பன்பட்டியில் அடிப்படை வசதிகள் நல்லாயில்லை

உவர்ப்பு நீரையே பருகுவதால் கல்லடைப்பு பாதிப்பு நல்லகருப்பன்பட்டியில் அடிப்படை வசதிகள் நல்லாயில்லை

உவர்ப்பு நீரையே பருகுவதால் கல்லடைப்பு பாதிப்பு நல்லகருப்பன்பட்டியில் அடிப்படை வசதிகள் நல்லாயில்லை

ADDED : ஜூன் 04, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
தேவதானப்பட்டி: நல்லகருப்பன்பட்டியில் பல ஆண்டுகளாக உவர்ப்பு நீரையே பருகுவதால் கல்லடைப்பு பாதிப்பால் மக்கள் அவதிக்குள்ளாவதாக மக்கள் புலம்புகின்றனர்.

பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டிஊராட்சி நல்லகருப்பன்பட்டியில் 1,3 வார்டுகளில் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு குடிநீர்,ரோடு, சாக்கடை, தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகள் இல்லை. சிறுகுளம் கண்மாயில் போர்வெல் அமைத்து உவர்ப்பு நீர் இரு நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

அவ்வப்போது சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து மேல்நிலைத் தொட்டி வழியாக உவர்ப்பு நீரும், குடிநீர் கலந்து வினியோகிக்கப்படுகிறது. இதனால் குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில். மாணவிகளுக்கு சுகாதார வளாகம், அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் முன்பு 200 மாணவர்கள் படித்த பள்ளியில் தற்போது 30 பேர் படிக்கின்றனர்.

சமத்துவபுரம் பகுதியில் இரவில் சில சமூக விரோதிகள் மது குடித்து விட்டு பூட்டிய வீடுகளில் திருடுகின்றனர். தேவதானப்பட்டி போலீசார் இரவு ரோந்துசெல்வதில்லை.

இப் பகுதியை சேர்ந்த மோகன் சுப்புராயலு, நல்லுச்சாமி, சீனிவாசன், வாசுதேவன், கலைச்செல்வி, பாலமுருகன் ஆகியோர் தினமலர் நாளிதழின் குடியிருப்போர் குரல் பகுதிக்காக பேசியதாவது:

நல்லகருப்பன்பட்டி வழியாக அழகர்நாயக்கன்பட்டிக்கு சோத்துப்பாறை கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம் செல்கிறது.

ஒன்றிய நிர்வாகம், இவ்விரு கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து ஏதாவது ஒன்றினை முழுமையாக நல்லகருப்பன்பட்டிக்கும் வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக உவர்ப்பு நீர் குடித்து, சிலர் கல்லடைப்பால் பாதித்து அவதிப்படுகின்றனர். நல்லகருப்பன்பட்டி ஜெயமங்கலம் இணைப்பு ரோடு மண் ரோடாக உள்ளது.

தார் ரோடாக மாற்ற வேண்டும். இப்பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள திறந்தவெளி கிணற்றுக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும். வீராச்சாமி நகரில் ரோடு வசதியின்றி மேடுபள்ளங்களாக உள்ளது. குடிநீர் குழாய் செல்லும் இடத்தில் சாக்கடை செல்கிறது. இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

வடக்கு காலனியில் சாக்கடை வசதி இல்லாததால் ரோட்டில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் கொசு தொல்லை உள்ளது. ரேஷன் கடை இல்லாததில் 2 கி.மீ., தூரம் சென்று ரேஷன் பொருட்களை வாங்கி வரும் அவலநிலை உள்ளது. இங்கு ரேஷன் கடை கொண்டு வரவேண்டும். சமத்துவபுரத்தில் 4 தெருவிளக்கு எரியாமல் உள்ளது. சிறுகுளம் வாய்க்காலை கடந்து தான் நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியும்.

பருவமழை காலங்களில் இந்த வாய்க்காலில் அதிகளவு தண்ணீர் செல்லும். அப்போது இடுபொருட்கள் கொண்டு செல்ல விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இந்த வாய்க்கால் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும். சுடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லை. இறுதிச்சடங்கு செய்வதற்கு குடத்தில் தண்ணீர் சுமந்து செல்ல வேண்டியுள்ளது. சுடுகாட்டில் போர் அமைத்து தண்ணீர் வசதி செய்திட வேண்டும்.

அங்கன்வாடி மையம் முன்பு ஒரு புறம் சாக்கடை கட்டிவிட்டு, மறுபுறம் திறந்த வெளியாக செல்கிறது. இதனால் சிறுவர்கள், சிறுமிகள் சாக்கடையை தாண்டி செல்ல சிரமப்படுகின்றனர். இதனால் அங்கன்வாடி மையத்தில் சிறுவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.-





      Our Apps Available On




      Dinamalar

      Follow us