Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/குமுளியில் துவங்கிய புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணியில் சுணக்கம்! சபரிமலை உற்ஸவத்திற்கு முன் முடிக்க வலியுறுத்தல்

குமுளியில் துவங்கிய புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணியில் சுணக்கம்! சபரிமலை உற்ஸவத்திற்கு முன் முடிக்க வலியுறுத்தல்

குமுளியில் துவங்கிய புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணியில் சுணக்கம்! சபரிமலை உற்ஸவத்திற்கு முன் முடிக்க வலியுறுத்தல்

குமுளியில் துவங்கிய புது பஸ் ஸ்டாண்ட் கட்டுமானப் பணியில் சுணக்கம்! சபரிமலை உற்ஸவத்திற்கு முன் முடிக்க வலியுறுத்தல்

ADDED : ஜன 31, 2024 06:34 AM


Google News
தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது குமுளி. கேரள பஸ் ஸ்டாண்ட் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடியதாக உள்ளது.

இந்நிலையில் தமிழகப் பகுதியில் உள்ள குமுளியில் பஸ் ஸ்டாண்ட் வசதியில்லாமல் ரோட்டிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. ரோட்டையே சிறுநீர் கழிப்பிடமாக பயன்படுத்தி வருவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. சபரிமலை உற்ஸவ காலத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் அதிகமாக இவ்வழியே வருகின்றனர்.

குமுளி வரை சென்று திரும்பும் அரசு பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நீண்ட நேரம் நிற்கும் வாகனங்களால் மேலும் அதிகமாக நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயம் உள்ளது. இதற்கு தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

டெப்போ மாற்றம்


குமுளியில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வனத்துறையின் முட்டுக்கட்டை அதிகமாக இருந்தது. அங்கு இயங்கி வந்த போக்குவரத்து டெப்போவை பஸ் ஸ்டாண்டாக மாற்றுவது எனவும், லோயர்கேம்பில் புதியதாக டெப்போ அமைப்பது என முடிவு செய்து, சில ஆண்டுகளுக்கு முன் டெப்போவை லோயர்கேம்பில் மாற்றி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

நிதி ஒதுக்கீடு


குமுளியில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க தமிழக முதல்வர் சில மாதங்களுக்கு முன் ரூ.7.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தார். கட்டுமானப் பணியை யார் செய்வது என்பதில் கூடலுார் நகராட்சி, போக்குவரத்து துறை, வனத்துறை இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வந்தது. இது தொடர்பாக துறை ரீதியாக நடந்த பேச்சு வார்த்தையில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.5.5 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

பூமிபூஜை


கட்டுமானப் பணிகளை துவக்குவதற்காக 2023 செப்., 11ல் எம்.எல்.ஏ.,க்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன் முன்னிலையில் பூமி பூஜை நடந்தது. இதுவரை 'பேஸ்மெண்ட்' பணிகள் கூட முடிவடையவில்லை. பல நாட்கள் பணிகள் நடக்காமல் முடங்கியிருந்தது. அவ்வப்போது பெயரளவில் மட்டும் ஆமை வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன.

எதிர்பார்ப்பு


ஒட்டியுள்ள கேரளா குமுளியில் வனப்பகுதிகள் அதிகமாக இருந்த போதிலும் விரிவாக்கப் பணிகள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன. தமிழக பகுதியில் ஏற்கனவே இருந்த டெப்போவில் கட்டுமான பணிகளை விரைவுப்படுத்த முடியாமல் உள்ளது. அடுத்த சபரிமலை உற்ஸவ காலம் துவங்குவதற்கு முன் பணிகளை விரைவு படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு முன்வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us