/உள்ளூர் செய்திகள்/தேனி/ குறுங்காடுகள் அமைக்க தயாரான தன்னார்வ இயற்கை அமைப்புகள் குறுங்காடுகள் அமைக்க தயாரான தன்னார்வ இயற்கை அமைப்புகள்
குறுங்காடுகள் அமைக்க தயாரான தன்னார்வ இயற்கை அமைப்புகள்
குறுங்காடுகள் அமைக்க தயாரான தன்னார்வ இயற்கை அமைப்புகள்
குறுங்காடுகள் அமைக்க தயாரான தன்னார்வ இயற்கை அமைப்புகள்

கண்மாய் கரையில் குறுங்காடு
மணிமாறன், தலைவர், ஆலிழை பசுமை இயக்கம் : மனித குலம் ஆரோக்கியமாக வாழ சுற்றுப்புறச்சூழல் மாசு படாமல் இருக்க வேண்டும். கடந்த 2012 ல் ஆரம்பிக்கப்பட்ட எங்கள் இயக்கம் சார்பில் இதுவரை ஒரு லட்சம் மரக்கன்றுகள் வரை நடவு செய்துள்ளோம். மரக்கன்றுகளை நட்டு விட்டு அப்படியே விட்டு செல்வதில்லை. தொடர்ந்து அதை பராமரிப்பதும் முக்கிய கடமையாகும். மேலும் எங்கள் நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில் பங்கேற்பவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். மரக்கன்றுகள் வளர்ப்பில் பொது மக்களிடம் மாணவ குழுக்கள் மூலம் ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது கோகிலாபுரம் கண்மாய் கரையில் குறுங்காடு, கம்பத்தில் 'அடர் வனம்' அமைக்க நடவடிக்கைகள் துவங்கி உள்ளன. மாவட்டம் முழுவதும் அனைத்து ஊர்களிலும் தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் கண்டறியப்பட்டு 'அடர் வனம்' அமைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட வேண்டும். அனைத்து பள்ளி வளாகங்களிலும் மூலிகைச் செடிகள், மரக்கன்றுகள் உள்ளடக்கிய நர்சரி ஒன்றை உருவாக்க அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை துவங்க உள்ளோம்., என்றார்.
எலக்ட்ரானிக் மாசு அபாயம்:
அன்புராஜா, தன்னார்வலர், சுருளிப்பட்டி : மரங்கன்றுகள் வளர்த்தல், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம், விதைப் பந்திற்கு பதிலாக விதைகளை எறிதல், மஞ்சப்பை வழங்குதல் போன்ற பணிகளை எனது நண்பர்களுடன் சேர்ந்து செய்து வருகிறேன். 18 ம் கால்வாய் கரைகளில் சுமார் 2 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. கம்பம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல அலுவலக வளாகங்களில் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளேன். பொது மக்களுக்கு எலக்ட்ரானிக் கழிவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எலக்ட்ரானிக் கழிவுகளால் ஏற்படும் மாசு அபாயகரமானது. தன்னார்வலர்களும், பொதுநல அமைப்புகளும் இதில் களம் காண வேண்டும். குப்பை, சாக்கடைகளை மட்டுமே மாசு படுத்தும் விஷயங்களாக நினைக்கின்றனர். பொது இடங்களில் புகைபிடிப்பது பெரிய அளவில் தீங்கை ஏற்படுத்தி வருகிறது. அதை தடுக்க வேண்டும். நகரின் மையப் பகுதியில் செல்லும் சேனை ஒடை கழிவு நீர் வீரப்ப நாயக்கன்குளத்தை மாசுபடுத்தி வருகிறது. அதை சீரமைக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டும். மரம் வளர்ப்பதை பற்றிய அவசியத்தை நேரம் கிடைக்கும் போது பொது மக்கள், நண்பர்கள், உறவினர்களிடம் தினமும் எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊர்கூடி தேர் இழுப்பது போல் ஓன்று பட்டு சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்., என்றார்.