/உள்ளூர் செய்திகள்/தேனி/ முல்லைப் பெரியாற்றில் கலக்கும் பாலிதீன் கழிவுகள் முல்லைப் பெரியாற்றில் கலக்கும் பாலிதீன் கழிவுகள்
முல்லைப் பெரியாற்றில் கலக்கும் பாலிதீன் கழிவுகள்
முல்லைப் பெரியாற்றில் கலக்கும் பாலிதீன் கழிவுகள்
முல்லைப் பெரியாற்றில் கலக்கும் பாலிதீன் கழிவுகள்
ADDED : ஜூலை 22, 2024 07:12 AM

கூடலுார்: கூடலுார் நகராட்சியில் முல்லைப் பெரியாற்றில் கழிவு நீருடன் பாலிதீன் கழிவுகளும் கலப்பதால் குடிநீராக பயன்படுத்தும் கிராம மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.
இந்நகராட்சியில் 21 வார்டுகள உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கருநாக்கமுத்தன்பட்டி அருகே முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. இந்தக் கழிவு நீருடன் பாலிதீன் கழிவுகளும் சேர்ந்து கலக்கப்படுகிறது. இதனால் ஆற்றிலிருந்து நேரடியாக பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்யும் குள்ளப்பவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, ஆங்கூர்பாளையம், வெட்டுக்காடு உள்ளிட்ட கிராமங்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுப்பதற்காக கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடலுார் நகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கட்டுமானப் பணிகளுக்காக இடம் தேர்வு செய்வதில் குளறுபடி ஏற்பட்டு, தேர்வு செய்யும் பணி காலதாமதமானது. இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியும் வீணானது. மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்து கூடலுார் நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. ஆனால் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி தலைவர் மொக்கப்பன் இதுகுறித்து பலமுறை தேனி கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. சமீபத்தில் வெட்டுக்காடில் நன்றி தெரிவிக்க வந்த எம்.பி., தங்கதமிழ்செல்வனிடம் அப்பகுதி மக்கள் கழிவுநீர் கலப்பதையும், சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனு கொடுத்தனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் முல்லைப் பெரியாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.