Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ கூட்டு குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்; ஏத்தக்கோயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு

கூட்டு குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்; ஏத்தக்கோயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு

கூட்டு குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்; ஏத்தக்கோயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு

கூட்டு குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலம்; ஏத்தக்கோயில் ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு தவிப்பு

ADDED : ஜூன் 11, 2024 07:13 AM


Google News
Latest Tamil News
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி ஒன்றியம், ஏத்தக்கோயில் ஊராட்சியில் குடிநீர், கழிப்பறை, வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர்.

இந்த ஊராட்சியில் சித்தயகவுண்டன்பட்டி, ஏத்தக்கோயில் இரு கிராமங்களில் 4000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஊராட்சிக்கு பாலக்கோம்பை கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் உள்ளது.

திட்டத்தின் கடைக்கோடியில் உள்ள கிராமத்திற்கு குடிநீர் வந்து சேராததால் பல ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கின்றனர். உவர்ப்பு தன்மை அதிகம் உள்ள போர்வெல் நீரை குடிநீர், சமையலுக்கும் பயன்படுத்துகின்றனர்.

குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வசதி இல்லை. பொது கழிப்பறை செயல்படாததால் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். கிராமத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்து பகுதி மக்கள் கூறியதாவது:

உவர்ப்பு நீரை பருகும் நிலை


முருகன், சித்தையகவுண்டன்பட்டி: சித்தையகவுண்டன்பட்டிக்கு கூட்டுக்குடிநீர் கிடைப்பதில்லை. போர்வெல் நீரை பயன்படுத்துகிறோம். வீட்டில் வளர்க்கும் கால்நடைகளுக்கு தண்ணீர் வழங்கி பராமரிக்க முடியாமல் தொலைதூரத்தில் உள்ள தோட்டத்தில் வைத்து பராமரிக்க வேண்டி உள்ளது.

இதனால் சிரமம் ஏற்படுகிறது. 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலைத் தொட்டிகள் இருந்தும் அனைத்து பகுதிக்கும் தண்ணீர் தேவை பூர்த்தியாகவில்லை. குடிநீர் பிரச்சினை குறித்து ஊராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளவில்லை.

சேதமடைந்த மேல்நிலை தொட்டி


எஸ்.மணிவேல், சித்தையகவுண்டன்பட்டி: நாடக மேடை அருகே உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிறது. குடிநீர் தொட்டியின் மேல் மூடி உடைந்துள்ளது. இதனால் தூசுகள், பறவைகளின் எச்சம் தண்ணீருடன் கலந்து பாதிப்பு ஏற்படுகிறது.

ஊராட்சியில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பொதுமக்கள் தற்காலிகமாக மேல்நிலைத்தொட்டியின் உடைந்த மேல் பகுதியை துணியால் மூடியுள்ளனர். காளியம்மன் கோயில் தெரு முன் பகுதியில் உடைந்த சிறு பாலத்தை ஊராட்சி நிர்வாகம் சரி செய்யாததால் பொதுமக்கள் தங்கள் செலவில் சரி செய்தனர்.

சமுதாயக்கூடம் அருகே சாக்கடை வழியாக வரும் கழிவுநீர், மழை நீரும் தெருவில் தேங்கி பாதிப்பு ஏற்படுகிறது. சமுதாயக்கூடத்தில் விசேஷ நாட்களில் கழிவு நீரைக்கடந்தே செல்கின்றனர். இதற்கான நிரந்தர தீர்வு இல்லை.

அடிப்படை தேவைகள் நிறைவேற்றுவதில் ஊராட்சி நிர்வாகம் அக்கறை காட்டவில்லை. மெயின் ரோடு பஸ் ஸ்டாப் அருகே சாக்கடையில் அடைப்பால் கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் குப்பையும் சேர்வதால் சுகாதாரப் பாதிப்பு ஏற்படுகிறது.

தண்ணீர் இன்றி கழிப்பறை மூடல்


கருப்பன், ஏத்தக்கோயில்: ஊராட்சியில் பகுதிகளில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் உள்ளது. அதுவும் மிக குறைந்தளவே உள்ளது. தண்ணீர் தட்டுப்பாடை தவிர்க்க குடம் நீரை 5 ரூபாய்க்கு விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. டேங்கர் லாரிகளில் தண்ணீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. வசதி உள்ளவர்கள் டேங்கர் நீரை ரூ.1000 கொடுத்து வாங்கி இருப்பில் வைத்து பயன்படுத்துகின்றனர். விலை கொடுத்து நீரை வாங்க முடியாதவர்கள் தொலைவில் உள்ள தோட்டப்பகுதியில் இருந்து சைக்கிளில் கொண்டு வருகின்றனர்.

முத்தாலம்மன் கோயில் அருகே பொதுக்கிணற்றில் உள்ள நீரை மோட்டார் மூலம் உறிஞ்சி தேவைக்கு கொடுக்கலாம். அதற்கான நடவடிக்கை இல்லை. இந்த கிணற்றுக்கு மேல் மூடி இல்லாததால் கிணற்று நீர் அசுத்தம் அடைகிறது. தண்ணீர் வசதி இல்லாததால் பொதுக்கழிப்பறையை மூடிவிட்டனர்.

கூட்டு குடிநீர் பற்றாக்குறை


ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: இந்த ஊராட்சிக்கு பாலக்கோம்பை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் குடிநீர் கிடைக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக ஆற்றில் நீர் வரத்து இல்லை. இதனால் மிக குறைவான அளவில் குடிநீர் வழங்குகின்றனர். குறைந்தளவு நீரை அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து வழங்க முடியவில்லை.

போர்வெல் நீரை பகுதி வாரியாக பிரித்து வழங்கப்படுகிறது. ஒரு முறை வினியோகித்தபின் அடுத்து வினியோகிக்க தாமதமாகிறது. அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதற்கான நிதி இல்லை. ஒவ்வொரு ஆண்டும் அரசு மூலம் ஒதுக்கப்படும் நிதியின் அடிப்படையில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us