Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/ மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்: மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து

மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்: மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து

மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்: மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து

மகிழ்ச்சி, பாராட்டு, ஏமாற்றம், அதிருப்தி, ஆதங்கம்: மத்திய பட்ஜெட் பற்றி கலவையான கருத்து

ADDED : ஜூலை 24, 2024 06:09 AM


Google News
Latest Tamil News

பொருளாதாரம் முன்னேறும்


-ரெஜினா, தொழில் முனைவோர், அரண்மனைப்புதுார், தேனி

நவதானியங்களை மதிப்பு கூட்டி உணவுப் பொருட்கள் தயாரித்து விற்கிறேன். மாவட்ட தொழில் மையம் மூலம் ரூ.15 லட்சம் மத்திய திட்டத்தில் கடன் பெற்று தொழில் நடத்துகிறேன். மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கிடு, வேளாண் துறையில் ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தது வரவேற்கத்தக்கது. இதனால் வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். எங்களை போன்ற தொழில்முனைவோர்களுக்கான மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கும். தொழில் சீராக நடைபெறும். ஒரு பெண் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியாக இந்த பட்ஜெட்யை உணர்கிறேன். ஏனெனில் மகளிர் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்கான ரூ.3 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் யாரையும் சார்ந்திருக்காமல் பொருளாதார ரீதியாகவும் முன்னேற அரிய வாய்ப்பு இது.

மிகுந்த ஏமாற்றம்


-ரவிச்சந்திரன், தலைவர், தென் தமிழக சுற்றுலா முகவர்கள் கூட்டமைப்பு, தேனி

நாட்டின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.11 லட்சம் கோடி ஒதுக்கீட்டால் சாலை வசதிகள் மேம்படும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தாமதமானால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கும் நடைமுறை ரத்து என்பது வரவேற்கத்தக்கது. காசி விஸ்வநாதர் கோயிலும், பீஹாரில் உள்ள புராதன கோயில்களும் உலகத்தரம் மிக்க ஆன்மிக சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளனர். அதனுடன் தமிழகத்தில் உள்ள உலக அதிசய திருக்கோயில்கள் குறித்தும் அறிவித்திருக்கலாம். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பண்பாடு, கலாச்சாராங்களை வெளி உலகத்திற்கு தெரிவிக்கும் வகையயில் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த அறிவிப்பு வெளியிடாததும், சுற்றுலா திட்டங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

மகளிர் திட்டங்கள் வரவேற்கதக்கது


-வினோதினி, உதவி பேராசிரியர், வணிகவியல் துறை, என்.எஸ். கலைக்கல்லுாரி, தேனி.

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான ஊக்கத்தொகை, கடன் மானியம் அதிகரிக்கப்படும் என்ற அவிப்பால் சிறு, குறு நிறுவனங்கள் அதிகளவில் துவக்கப்படும். இளைஞர் திறன் மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களை தொழில் முனைவோராக மாற்றும். கல்விக்கடன் அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் தள்ளுபடி பற்றிய அறிவிப்பு இருந்திருந்தால் நன்றாக இருக்கும். 109 வகையான விதைகள் விதைக்க திட்டமிட்டுள்ளனர். இது வேளாண்மையை மேம்படுத்தும். நடுத்தர வேலையில் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இந்த வரி குறைப்பினை வரி செலுத்தும் பொதுமக்களுக்கு குறைத்திருக்கலாம். இந்த பட்ஜெட் அனைவருக்குமானது, வரவேற்க வேண்டியது.மகளிர் திட்டங்கள் வரவேற்கதக்கது.

அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்


-சென்னமராஜ், மாவட்ட செயலாளர், அரசு ஊழியர்கள் சங்கம்,தேனி.

வருமான வரி உச்சவரம்பு மாற்றி அமைக்கவில்லை. நடுத்தர மக்கள், அரசு ஊழியர்கள் வருமானத்தை சேமிக்க எல்.ஐ.சி., பங்குச்சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இவற்றில் கிடைக்கும் முதலீட்டு லாபத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி 10ல் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது முதலீடு செய்பவர்களுக்கு சுமையாகும். அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம், நிரந்தர ஓய்வூதியம் பற்றி குறிப்பிடபடவில்லை. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சம்பளத்தில் 14 சதவீதம் பிடித்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவாத ஓய்வூதியம் பற்றி தெரிவிக்கவில்லை. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. புதிய பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்குவது பற்றி அறிவிப்பு இல்லாததது ஏமாற்றம் அளிக்கிறது. அரசு ஊழியர்கள், நடுத்தர குடும்பத்தினர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. தமிழகத்திற்கு என எந்த ஒரு வளர்ச்சி திட்ட அறிவிப்பும் இல்லாதது வருத்தமளிக்கிறது.

குறிப்பிட்ட மாநிலங்களுக்கு அதிக நிதி


-ஆர்.சதீஸ், நிறுவனர் அர்ப்பணம் டெவலப்மென்ட் டிரஸ்ட், ஆண்டிபட்டி

நாடு முழுவதும் 3 கோடி வீடுகள் கட்டித்தர மத்திய அரசு ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இடம் இருந்தும் வீடுகள் கட்ட முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும். மருத்துவத்துறைக்கு போதிய திட்டங்களும் நிதியும் ஒதுக்கப்படவில்லை. சிகிச்சையில் அரசு மருத்துவமனையை நம்பி உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. பீஹாருக்கு ரூ.26 ஆயிரம் கோடி, ஆந்திராவிற்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டும் அதிக தொகை ஒதுக்கீடு செய்வது எந்த விதத்தில் நியாயம். பத்திரப்பதிவுக்கான கட்டணம் அதிகம் வசூலிக்கும் மாநில அரசுகளிடம், கட்டணத்தை குறைப்பதற்கான மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்பதாக உள்ளது.

ஜி.எஸ்.டி., வரி எளிதானதற்கு வரவேற்பு


-முருகன், வர்த்தக சங்க தலைவர், கம்பம்

பட்ஜெட்டில் வரிச் சலுகையை பெரிதும் எதிர்பார்த்திருந்தோம். வரி விதிப்பு பல முனை என்பதை ஒரு முனை என்று அறிவித்திருந்தால் சந்தோஷப்பட்டிருப்போம். அந்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம். பிளாஸ்டிக் மூலப்பொருள் இறக்குமதிக்கு வரி உயர்த்தியிருப்பது பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும். குறிப்பிட்ட முதலீடுகளுக்கு மூலதன ஆதாயவரி அறிவிப்பு பாதிப்பை ஏற்படுத்தும். தொழில் நிறுவனங்களின் வழக்குகளை கையாள தனி தீர்ப்பாயம் வரவேற்க கூடியது- ஜி.எஸ்.. டி. வரி எளிதாக்கப்படும் என்பது வரவேற்க கூடியது. இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், அடித்தட்டு மக்களை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வர்த்தகங்களுக்கான சலுகை அறிவிப்புக்கள் நாங்கள் எதிர்பார்ந்த அளவு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.

பாராட்டு பெறும் பட்ஜெட்


-மணிகண்டன், தொழிலதிபர், சின்னமனூர்

தங்கம், வெள்ளி போன்றவற்றிற்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைத்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவே வரவேற்கிறது. ஒட்டுமொத்த பெண்கள் இந்த அறிவிப்பை வரவேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. காரணம் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறையும். ஜெட் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை குறையும். அலைபேசி உதிரி பாகங்கள், சார்ஜர்கள் இறக்குமதி வரி 15 சதவீதம் குறைத்திருப்பது அலைபேசிகள் விலை குறையும். இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, வேளாண் துறைக்கு 1-52 லட்சம் கோடி ஒதுக்கீடு வரவேற்க கூடியது. ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்பதும் சிறப்பாகும். ஆக மொத்தத்தில் மெச்சத் தகுந்த பட்ஜெட் இது.

பெண்கள் வரவேற்கும் பட்ஜெட்


-பிரபா மீனா, குடும்பதலைவி, பெரியகுளம்--

பெண்கள் வேலைக்கு செல்வதை ஊக்குவிக்க மகளிர் விடுதிகள் அமைப்பது, திவாலான நிதி நிறுவனங்களிடமிருந்து மக்களுக்கு பணத்தைப் பெற்றுத் தர ஆணையம் அமைப்பு. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் உள்நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பு படிக்க ரூ.10 லட்சம் வழங்குவது. இத்திட்டத்தின் கீழ், உலகஅளவில் இந்தியா மாணவர்கள் தனித்துவம் பெறுவர். ஒரு கோடி இளைஞர்களுக்கு பணி அனுபவம் பெறும் வகையில் 'இன்டர்ன்ஷிப்' பயிற்சி அளிக்கப்படுவதும், அவர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.6 ஆயிரம் வழங்கபடுவது கல்வி மீது ஆர்வத்தை அதிகரிக்கும். தங்கத்தின் மீது 6 சதவீத சுங்க வரி குறைப்பால் உயரத்தில் சென்ற தங்கம் விலை குறையும். இதனை பெண்கள் வரவேற்கின்றனர்.

இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு


-ஜெயபால், பொருளாளர், முல்லைச்சாரல் விவசாய சங்கம், கூடலூர்

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து உற்பத்தியை அதிகரிக்க திட்டம் குறித்த அறிவிப்பு வரவேற்கக் கூடியதாகும். மாநில அரசோடு இணைந்து நகரங்களை வளர்ச்சி மையமாக மேம்படுத்துவதற்கான அறிவிப்பு இருந்த போதிலும் தமிழக அரசுடன் இணக்கமான சூழல் இல்லாதது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. நகர்ப்புறங்களில் நில ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படுவது, வேலை வாய்ப்பு உருவாக்க திறன் மேம்பாட்டிற்கு ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்தது உள்ளிட்டவைகள் வரவேற்கக் கூடியது. அதே வேளையில் வருமான வரி விலக்கிற்கு தனிநபர் ஆண்டு வருமானத்தை ரூ.3 லட்சத்திலிருந்து சற்று அதிகரிக்காதது ஏமாற்றத்தை அளிக்கிறது.

கடன் வழங்கப்படுவது வரவேற்பு


-காளிமுத்து, வர்த்தகர், போடி

சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்படுவது வரவேற்பதாக உள்ளது. அறிவிப்போடு இல்லாமல் நடைமுறை படுத்த வேண்டும். தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் என்பதை ரூ.5 லட்சம் ஆக உயர்த்தி வரி இல்லாத வகையில் இருக்க வேண்டும். ஆந்திரா, பீஹார் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிக அளவு உள்ளது.

தமிழக தொழில் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்படவில்லை. ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. சிறு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

இளைஞர்களுக்கு ஆயிரம் தொழில் நிறுவனங்கள் துவங்க இருப்பது வரவேற்கத்தக்கதாகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us