ADDED : ஜூலை 26, 2024 12:35 AM

பெரியகுளம்:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி மார்க்கெட்டில் வெள்ளைப்பூண்டு சாராசரியாக கிலோவிற்கு ரூ.50 விலை உயர்ந்துள்ளது.
வடுகபட்டி வெள்ளை பூண்டு மார்க்கெட் தமிழகத்தில் முன்னோடியானதாகும். இங்கு ஒவ்வொரு வியாழன், ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் நடக்கும். இம்மார்கெட்டிற்கு கொடைக்கானல் மலைப்பகுதியில் விளையும் மலைப்பூண்டுகள், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், இமாச்சலப்பிரதேசம், காஷ்மீரில் விளையும் வெள்ளைப்பூண்டுகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள 100 கமிஷன் கடையிலிருந்து ஏலம் எடுக்கும் வியாபாரிகள் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் அவற்றை விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
இம்மார்கெட்டில் ஜூலை 21 விற்பனையான அனைத்து வகை வெள்ளைப்பூண்டுகளும் நேற்று (ஜூலை 25ல்) கிலோவிற்கு ரூ.50 வரை விலை உயர்ந்து இருந்தது. கொடைக்கானல் மலைப்பூண்டு ஒரு கிலோ ரூ. 400 முதல் ரூ.500 ஆகவும், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், இமாச்சாலம், காஷ்மீர் வெள்ளைப்பூண்டுகள் தரம் வாரியாக கிலோ ரூ.200 முதல் ரூ.400 ஆகவும், ரசப்பூண்டு கிலோ ரூ.170 முதல் ரூ.200 ஆகவும் விற்பனையாயின.
--