ADDED : செப் 25, 2025 12:39 AM
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ஆவணம் பெரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் முகமது கசாலி, 50. இவர், தன் நிலப் பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய செப்., 19ல், பெரியநாயகிபுரம் வி.ஏ.ஓ., கண்ணன், 54, என்பவரை அணுகியுள்ளார். அதற்கு, 2,500 ரூபாய் வி.ஏ.ஓ., லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் தர விரும்பாத முகமது கசாலி, தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் அறிவுறுத்தலின்படி, வி.ஏ.ஓ., கண்ணனுக்கு 2,500 ரூபாய் லஞ்சம் வழங்கியபோது, மறைந்திருந்த போலீசார், கண்ணனை நேற்று கையும் களவுமாக பிடித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சோதனை நடத்தி, 25,000 ரூபாயை பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே, கண்டோன்மென்ட் பத்திரப்பதிவு அலுவலங்கள் உள்ளன. இதில், ஜாயிண்ட் - 1 பத்திரப்பதிவு அலுவலகத்தில், நேற்று மாலை, 4 மணிக்கு, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார், சோதனை செய்தனர். சார் - - பதிவாளர் முகமது அப்துல் காதரின் அலுவலக உதவியாளர் அறிவழகன் என்பவரின் பையை சோதனையிட்டனர். அதில், அவரிடம் கணக்கில் வராத, 53,500 ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, போலீசார் பறிமுதல் செய்தனர்.