/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/மனித உரிமை ஆணையம் மீது வீண் பழி நெல் கொள்முதல் குறித்து விவசாயிகள் புகார்மனித உரிமை ஆணையம் மீது வீண் பழி நெல் கொள்முதல் குறித்து விவசாயிகள் புகார்
மனித உரிமை ஆணையம் மீது வீண் பழி நெல் கொள்முதல் குறித்து விவசாயிகள் புகார்
மனித உரிமை ஆணையம் மீது வீண் பழி நெல் கொள்முதல் குறித்து விவசாயிகள் புகார்
மனித உரிமை ஆணையம் மீது வீண் பழி நெல் கொள்முதல் குறித்து விவசாயிகள் புகார்
ADDED : பிப் 10, 2024 08:22 PM
தஞ்சாவூர்:காவிரி டெல்டா மாவட்டங்களில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், ஒரு மூட்டை நெல் 40 கிலோ என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
ஆனால், 3 கிலோ அதிகமாக கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு மூட்டைக்கு, 40 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டியுள்ளது.
பாதிக்கக்கூடாது
இதனால் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கு, 100 ரூபாய் லஞ்சமும், 8 கிலோ வரை கூடுதலாக நெல்லை வழங்க வேண்டிய சூழல் உள்ளது.
நெல் மூட்டைகளின் எடையை 50 கிலோவாக உயர்த்த வேண்டும் என, விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனால், தேசிய மனித உரிமை ஆணையம் சுமை துாக்கும் தொழிலாளர்கள் பாதிக்கக்கூடாது என்பதால், நெல்லை 40 கிலோ எடையில் கொள்முதல் செய்ய கூறியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
அதே நேரத்தில், ரேஷன் கடைகளுக்கு வரும் சர்க்கரை, அரிசி மூட்டை, 50 கிலோ என வினியோகம் செய்யும் நிலையிலும், உளுந்து, எள், மக்காசோளம், முந்திரி போன்ற விளைப்பொருட்கள் 80 முதல் 100 கிலோ எனவும் கொள்முதல் செய்யும் நிலையிலும் அந்த மூட்டைகளை சுமை துாக்கும் தொழிலாளர்கள் தானே சுமக்கின்றனர் என்ற கேள்வியை விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.
பாதுகாப்பு
தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்க செயலர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:
தமிழகத்தில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ஒரு மூட்டை நெல் 75 கிலோ என கொள்முதல் செய்யப்படுகிறது. இதே போல உளுந்து, பருத்தி, கம்பு, பயிர் வகைகள் 100 கிலோ, தேங்காய் பருப்பு, சூரியகாந்தி,முந்திரி 80 கிலோ அளவில் கொள்முதல் செய்கின்றனர்.
ஆனால், டெல்டாவில் மட்டும் தேசிய மனித உரிமை ஆணையம் 40 கிலோ தான் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என கூறியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அப்படியானால் நாடு முழுதும் இந்திய உணவுக் கழகம் ஏன் அமல்படுத்தவில்லை?
எடை கொள்ளை
ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் 50 முதல் 75 கிலோ வரையில் நெல் கொள்முதல் செய்கின்றனர். இந்த ஏமாற்று வேலை எல்லாம், ஒரு மூட்டைக்கு, 40 ரூபாய் வரை மாமூல், எடை கொள்ளையை கையாள தான் நடக்கிறது.
இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. நீதிபதிகளும் அரசிடம் பல்வேறு விளக்கம் கேட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.