/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/காலம் தாழ்த்தி வந்த தண்ணீரால் பயனில்லை நெல் பதரானதால் விவசாயிகள் வேதனைகாலம் தாழ்த்தி வந்த தண்ணீரால் பயனில்லை நெல் பதரானதால் விவசாயிகள் வேதனை
காலம் தாழ்த்தி வந்த தண்ணீரால் பயனில்லை நெல் பதரானதால் விவசாயிகள் வேதனை
காலம் தாழ்த்தி வந்த தண்ணீரால் பயனில்லை நெல் பதரானதால் விவசாயிகள் வேதனை
காலம் தாழ்த்தி வந்த தண்ணீரால் பயனில்லை நெல் பதரானதால் விவசாயிகள் வேதனை
ADDED : பிப் 10, 2024 01:19 AM

தஞ்சாவூர்:மேட்டூர் அணை கடந்த, ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டாலும், போதுமான அளவுக்கு நீர் இருப்பு இல்லாததால், அக்டோபர் 10ம் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஆற்றுப் பாசனத்தை சேர்ந்த விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை நம்பியே சம்பா, தாளடி சாகுபடியைத் துவங்கினர்.
இதன் வாயிலாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.96 லட்சம், திருவாரூரில் 3.62 லட்சம், நாகையில் 1.52 லட்சம், மயிலாடுதுறையில் 1.85 லட்சம் என சுமார் 10 லட்சம் ஏக்கரில், சாகுபடி நடந்தது.
இதிலும், ஆற்றுப்பாசன பகுதிகளில் நீர் ஆதாரம் இல்லாததால், வழக்கமான பரப்பளவை விட குறைவாகவே பயிரிடப்பட்டது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில், கதிர் வரும் நிலையிலும், கதிர் வந்து பால் பிடிக்கும் தருணத்திலும் பயிர்கள் பாதித்தன.
இதையடுத்து, விவசாயிகள் கடந்த ஜனவரியில் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். ஆனால், அரசு திறக்காமல், பிப்., 3ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில், 4,715 ஏக்கர், நாகை மாவட்டத்தில், 18,059 ஏக்கரில் சாகுபடி செய்த சம்பா நெற்பயிரை காப்பாற்ற மேட்டூர் அணையில் இருந்து 2 டி.எம்.சி., தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனால், கல்லணையில் இருந்து வெண்ணாற்றுக்கு திறக்கப்பட்ட 5,000 கன அடி நீர், வாய்க்காலில் போதிய அளவு செல்லவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலர் மாசிலாமணி கூறியதாவது:
மேட்டூரில் இருந்து தற்போது திறக்கப்பட்ட தண்ணீரால் எந்த பயனும் இல்லை. கடந்த ஜனவரியில் தண்ணீரை திறந்து இருந்தால் பயனாக இருந்திருக்கும். திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளன.
இதே தஞ்சாவூர் மாவட்டம் மேலத்திருப்பூந்துருத்தி, காட்டுக்கோட்டை ஆகிய பகுதியில் குடமுருட்டி ஆற்றை நம்பி விவசாயம் செய்த நெல் பதராகி, மகசூலில் பெரும் இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. அரசு வறட்சி நிவாரணம் அறிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.