/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ ரூ.22 கோடி ஐம்பொன் சிலைகள் மீட்பு; 3 பேர் கைது ரூ.22 கோடி ஐம்பொன் சிலைகள் மீட்பு; 3 பேர் கைது
ரூ.22 கோடி ஐம்பொன் சிலைகள் மீட்பு; 3 பேர் கைது
ரூ.22 கோடி ஐம்பொன் சிலைகள் மீட்பு; 3 பேர் கைது
ரூ.22 கோடி ஐம்பொன் சிலைகள் மீட்பு; 3 பேர் கைது
ADDED : ஜூலை 08, 2024 05:21 PM

தஞ்சாவூர்:
தமிழகத்தில், கடந்த வாரம் விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர் பகுதியில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முகாமிட்டு சிலை கடத்தல் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக திருச்சியில், ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அடங்கிய குழுவினர், 6ம் தேதி தஞ்சாவூர் அருகே புதுக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், மிகவும் தொண்மையான, 3 அடி உயர திரிபுராந்தகர் சிலை, 2.75 அடி உயர வீணாதார தட்சிணாமூர்த்தி சிலை, 3.25 அடி உயர ரிஷபதேவர் சிலை, தலா 2.75 அடி உயரம் கொண்ட மூன்று தேவி சிலைகள் என, ஆறு உலோக சிலைகள் இருந்தன.
இதையடுத்து, சிலைகளை பறிமுதல் செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், காரை ஓட்டி வந்த, சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதி ராஜேஷ் கண்ணன், 42, காரில் வந்த மயிலாடுதுறை மாவட்டம், கொற்கை கிராமத்தை சேர்ந்த லட்சுமணன், 64, ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், லட்சுமணன் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது, ஆறு ஐம்பொன் சிலைகள் கிடைத்துள்ளன. அவற்றை, அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், வீட்டில் மறைத்து வைத்திருந்தார்.
தன் நண்பரான ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்துள்ளார். ராஜேஷ்கண்ணன், தன் நண்பரும், லட்சுமணனின் மருமகனுமான, சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த திருமுருகன், 39, என்பவரும், சிலைகளை பார்த்து விட்டு, 'நேரம் வரும் போது வெளிநாட்டிற்கு கடத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும்' என, கூறியுள்ளனர்.
இதற்கிடையில், ராஜேஷ் கண்ணனுக்கு சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு கிடைத்துள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு பின், ராஜேஷ்கண்ணன், திருமுருகன், லட்சுமணன் மூவரும் ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்ப திட்டமிட்டு, 5ம் தேதி நள்ளிரவு, லட்சுமணன் வீட்டில் இருந்து, சிலைகளை எடுத்துக் கொண்டு திருச்சி வழியாக சென்னை சென்ற போது பிடிபட்டனர்.
இது தொடர்பாக, ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணன் மூவரையும் கைது செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஆறு சிலைகளையும் பறிமுதல் செய்தனர். கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல்கண்ணன், நேற்று அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.