/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பா.ம.க., மாவட்ட செயலரை மிரட்டிய இன்ஸ்., இடமாற்றம்பா.ம.க., மாவட்ட செயலரை மிரட்டிய இன்ஸ்., இடமாற்றம்
பா.ம.க., மாவட்ட செயலரை மிரட்டிய இன்ஸ்., இடமாற்றம்
பா.ம.க., மாவட்ட செயலரை மிரட்டிய இன்ஸ்., இடமாற்றம்
பா.ம.க., மாவட்ட செயலரை மிரட்டிய இன்ஸ்., இடமாற்றம்
ADDED : ஜூலை 12, 2024 01:40 AM

தஞ்சாவூர்,:தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி சேர்மனும், பா.ம.க., தஞ்சாவூர் வடக்கு மாவட்ட செயலருமான ஸ்டாலின், நேற்று காலை காரில், கோவை சென்று கொண்டிருந்தார். அப்போது, பந்தநல்லுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணராஜா, மிரட்டும் வகையில் அவரிடம் மொபைல் போனில் பேசியுள்ளார்.
இதையடுத்து, தஞ்சாவூர் எஸ்.பி.,யை தொடர்புகொண்ட ஸ்டாலின் விபரங்களை கூறியுள்ளார். அது தொடர்பாக புகார் மனு ஒன்றையும் அனுப்பியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய எஸ்.பி., ஆஷிஷ் ராவத், உடனடியாக, இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ண ராஜாவை, தஞ்சாவூர் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
தஞ்சை மாவட்ட காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ண ராஜாவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தி, பா.ம.க., மாவட்ட செயலர் ஸ்டாலின் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் எஸ்.பி., ஆஷிஷ் ராவத் கூறியதாவது:
பந்தநல்லுார் பகுதியில் மணல் கடத்தல் விவகாரத்தில் பா.ம.க.,வை சேர்ந்த சிலர் சம்பந்தப்பட்ட நிலையில், ஆடுதுறை பேரூராட்சி சேர்மன் ஸ்டாலின், பந்தநல்லுார் இன்ஸ்பெக்டரிடம் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை விடுவிக்க கூறியுள்ளார்.
இதில், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் மீது ஸ்டாலின் அளித்த புகாரை விசாரித்து வருகிறோம். இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்ததற்கு வேறு காரணங்கள் உள்ளன. ஸ்டாலின் புகாருக்கும், மாற்றத்துக்கும் தொடர்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.