ADDED : ஜன 10, 2024 11:49 PM

தென்காசி:தென்காசியில் வீடு கட்ட அனுமதி வழங்க ரூ. 40 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் மற்றும் கட்டட கான்ட்ராக்டர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி அருகே குத்துக்கல்வலசை ராஜாநகரில் நந்தனா என்பவர் வீடு கட்டி வருகிறார். இவரது உறவினரான கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ஐஸ்வர்யா குடியிருப்பை சேர்ந்த ரெஜினீஸ் பாபு 44, வீடு கட்டுவதற்கான திட்ட அனுமதி பெற விண்ணப்பித்திருந்தார். குத்துக்கல்வலசை ஊராட்சி தலைவர் சத்யராஜ் 39, வீடு கட்ட, திட்ட மதிப்பீட்டில் இரண்டு சதவீதம் அதாவது ரூ. 46 ஆயிரம் லஞ்சமாக தருமாறு கேட்டுள்ளார். ரெஜினீஸ்பாபு இது குறித்து தென்காசி லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,பால் சுதரிடம் புகார் செய்தார்.
போலீசார் ரசாயன பவுடர் தடவி கொடுத்த ரூ. 46 ஆயிரத்தை நேற்று ஊராட்சி அலுவலகத்தில் வைத்து ரெஜினீஸ்பாபு கொடுத்தார். அதனை சத்யராஜின் நண்பரும் கட்டட கான்ட்ராக்டருமான சவுந்தரராஜன் 40, பெற்று சத்யராஜிடம் கொடுத்துள்ளார். அதில் அவர் ரூ. 40 ஆயிரம் மட்டும் பெற்றுள்ளார். அங்கு மறைந்திருந்த டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ, எஸ்.ஐ., ரவி மற்றும் போலீசார் ஊராட்சித் தலைவர் மற்றும் கட்டட கான்ட்ராக்டரை கைது செய்தனர். இருவரது வீடுகளிலும் சோதனை மேற்கொண்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சத்யராஜ் முன்னர் அ.தி.மு.க.,வில் இருந்தார். தற்போது தி.மு.க., பிரமுகராக உள்ளார்.