Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வேலை தேடி வெளியூர் செல்லும் இளைஞர்கள்; தொழில் வளம் பெருகாத சிவகங்கை மாவட்டம்

வேலை தேடி வெளியூர் செல்லும் இளைஞர்கள்; தொழில் வளம் பெருகாத சிவகங்கை மாவட்டம்

வேலை தேடி வெளியூர் செல்லும் இளைஞர்கள்; தொழில் வளம் பெருகாத சிவகங்கை மாவட்டம்

வேலை தேடி வெளியூர் செல்லும் இளைஞர்கள்; தொழில் வளம் பெருகாத சிவகங்கை மாவட்டம்

ADDED : ஜூலை 14, 2024 05:38 AM


Google News
சிவகங்கை மாவட்டத்தில் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு விவசாயம் தவிர குறிப்பிடும் படியாக எந்த தொழில்களும் இல்லாததால் அவற்றில் இளைஞர்கள் ஈடுபட வழியில்லை. சிவகங்கை அருகே கோமாளிபட்டியில் அரசுக்கு சொந்தமான கிராபைட் கனிம நிறுவனம் டாமின் உள்ளது.

1994ம் ஆண்டு தொடங்கிய இங்கு கிராபைட் கல்லை வெட்டியெடுத்து அதிலிருந்து கிராபைட் பவுடர் பிரித்து எடுக்கும் பணி நடக்கிறது. தொழிற்சாலை தொடங்கிய போது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் விரிவாக்கமின்றி தற்போதும் செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசுக்கு சொந்தமான காரைக்குடி மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காளையார்கோவில் காளீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் மில் உள்ளிட்ட சில மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளது. இதில் காளையார்கோவில் காளீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் மில் தற்போது இயங்கவில்லை. சிவகங்கை அருகே உடைகுளம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஈஐடி பாரி வடிப்பக ஆலை உள்ளது. இவற்றை தவிர வேலை வாய்ப்பு தரும் நிறுவனங்கள் மாவட்டத்தில் இல்லை.

சிறிய அளவில் தனியார் டெக்ஸ்டைல்ஸ் உள்ளன.மேலும் மானாமதுரை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் சிறிய அளவிலான சிப்காட் அமைக்கப்பட்டு அங்கு தனியார் தொழிற் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கும் கூடுதல் எண்ணிக்கையிலான தொழில் நிறுவனங்கள் இல்லை.

சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் தொடங்கப்பட்ட ஸ்பைசஸ் பார்க் முழுமையான செயல்பாட்டிற்கு வரவில்லை. அரசு சார்பில் தொழிற்சாலைகள், கூடுதல் எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரியும் வகையில் தனியார் தொழில் நிறுவனங்கள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை மாவட்ட மக்களால் வைக்கப்பட்டும் பல ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனால் பெரும்பாலான இளைஞர்கள் சென்னை, திருப்பூர், கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளிலேயே வேலை பார்த்து வருகின்றனர். இங்கும் கொத்தனார், எலக்ட்ரீசியன், பிளம்பர் உள்ளிட்ட தொழிலாளர்களாகவும், ஹோட்டல் தொழிலுக்கு அதிகப்படியானோர் செல்கின்றனர். மாவட்டத்தில் விவசாய தொழிலும் குறைந்து வருவதால், இங்குள்ள இளைஞர்கள் எந்த வேலை கிடைத்தாலும் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் தொடங்ககூடிய தனியார் தொழிற்சாலைகளும் குறிப்பிட்ட மாவட்டங்களியே தொடங்கப்படுகிறது. அவற்றை சிவகங்கை போன்ற பின்தங்கிய மாவட்டங்களுக்கு அரசு பரிந்துரை செய்யலாம். சிவகங்கை மாவட்டத்தில்இருந்து வெளிநாடு, மாவட்டங்களுக்கு இளைஞர்கள் சென்று வேலை தேடும் அவலத்தை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us