/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஓலைச்சுவடிகளை பதப்படுத்தி டிஜிட்டலாக்கும் பணி துவக்கம் ஓலைச்சுவடிகளை பதப்படுத்தி டிஜிட்டலாக்கும் பணி துவக்கம்
ஓலைச்சுவடிகளை பதப்படுத்தி டிஜிட்டலாக்கும் பணி துவக்கம்
ஓலைச்சுவடிகளை பதப்படுத்தி டிஜிட்டலாக்கும் பணி துவக்கம்
ஓலைச்சுவடிகளை பதப்படுத்தி டிஜிட்டலாக்கும் பணி துவக்கம்
ADDED : செப் 12, 2025 04:22 AM

திருப்புத்துார்: தமிழக தொல்லியல்துறையின் தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு குழுமத்தினர் பழமையான ஓலைச்சுவடிகளை பதப்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தற்போது இப்பணி துவங்கியுள்ளது.
தமிழகத்தில் ஓலைச்சுவடிகள் எழுதுவது என்பது 350 லிருந்து 400 ஆண்டுகள் பழமையானது. தமிழ்,கிரந்தம்,தேவநாகரி எழுத்துக்களில் சுவடிகள் எழுதப்பட்டுள்ளது. எழுத்து ஒழுங்கிற்காக அந்த எழுத்துக்களில் புள்ளி, துணை எழுத்து,இரட்டைச்சுழி கொம்பு போன்ற எழுத்துக்கள் இருக்காது. இதனால் இந்த எழுத்துக்கள் கீறல்' என்றழைக்கப் படுகிறது. கல்வெட்டுக்கள், செப்புத்தகடுகளில் எழுதப்படுவது கொத்து' எழுத்துக்கள் ஆகும்.
இலக்கியங்கள்,புராணங்கள் மட்டுமின்றி வரவு செலவு கணக்கு,மருத்துவக்குறிப்பு எழுத சுவடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கணக்கு சுவடிகள் நீண்டதாகவும்,இலக்கிய சுவடிகள் சிறிதாகவும், மருத்துவச்சுவடிகள் சிறியதாகவும் உள்ளது.
ஓலைச்சுவடிகளை பாதுகாக்க நமது முன்னோர்கள் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை பிரதி எடுத்து பாதுகாத்தனர். சுவடிகளை அப்படியே பிரதி எடுப்பது மூலப்பிரதி. சுவடியில் உள்ள குறிப்பின் அர்த்தம் மாறாமல் எளிமையாக பிரதி எடுப்பது பிரதி எனப்பட்டது. தற்போது பிரதி எடுப்பது கடினமாகும் என்பதால் ஒலைகளை பதப்படுத்தி பாதுகாக் கின்றனர்.
தமிழ்நாடு தொல்லியல்துறையில், மாநில சுவடிகள் குழுமத்தினர் தற்போது அனைத்து சுவடிகளையும் பதப்படுத்தி வருகிறார்கள். தனியாரிடம் உள்ள ஓலைச்சுவடிகளையும் இலவசமாக பதப்படுத்தி கொடுக்கின்றனர். மேலும், சுவடிகளில் உள்ள பழமையான தகவல்களை டிஜிட்டல் மயமாக்குகின்றனர். அத்துடன் உரிமையாளர்களுக்கு சுவடிகளில் உள்ள தகவல்களை அச்சிட்டு கொடுக்கின்றனர். மதுரை மண்டல சுவடி ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தினர் தற்போது மதுரை,தேனி,திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டும் 2.5 லட்சம் சுவடிகளை பதப்படுத்தி, டிஜிட்டலில் பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தற்போது சுவடிகளை பதப்படுத்தி வருகின்றனர்.
ஓலைச்சுவடிகளை சுத்தம் செய்வது குறித்து மதுரை மண்டலத்தைச் சேர்ந்த வேல்முருகன்,சாந்தகுமார் கூறுகையில், முதலில் சுவடிகளில் உள்ள துாசி அகற்றப்படுகிறது. பின்னர் கருப்பு மை எழுத்துக்களில் தடவப்படுகிறது. பின்னர் லெமன்கிராஸ் எண்ணெய் சுவடி முழுவதும் தடவப்படும்.
அதில் சுவடிகள் பதப்படுத்தப்படுவதுடன் எழுத்துக்கள் கருப்பாக தெரியவரும். பின்னர் கேமரா மூலம் சுவடிகள் போட்டோ எடுக்கப்படும். போட்டோ சென்னை அலுவலகம் அனுப்பப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. சுவடிகளில் உள்ள தகவலும் படிக்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு வரை இது சுவடியை பாதுகாக்கும். இருப்பினும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சுவடியை பராமரிக்க உரிமையாளருக்கு அறிவுறுத்தப்படும்.' என்றார்.
நேற்று செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியக ஓலைச்சுவடிகள் பராமரிப்பு பணி நடந்தது. அருங்காட்சியக நிறுவனர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் கூறுகையில், எங்கள் வீடு ஓலைச்சுவடிகளை தமிழ்சுவடி பாதுகாப்பு மதுரை மண்டலக்குழுவினர் பராமரித்தனர். சிவகங்கை மாவட்டத்தில் அதிகமாக ஓலைச்சுவடிகள் உள்ளன. உ.வே.சாமிநாதய்யர் கொத்தமங்கலத்திலும், மிதிலைப்பட்டியிலும் தான் அதிகமாக சுவடிகளை சேகரித்தார்.
நகரத்தார் வீடுகளில் தொழில் கணக்கு,கோயில் கொடை,கப்பல் போக்குவரத்து செலவு,தமிழ் இலக்கியங்கள் குறித்த ஓலைச்சுவடிகள் பரவலாக உள்ளன. அவற்றை பராமரித்து பாதுகாக்க இது ஒரு வாய்ப்பு ஆகும் என்றார்.