Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையத்திற்காக காத்திருப்பு; மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா

திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையத்திற்காக காத்திருப்பு; மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா

திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையத்திற்காக காத்திருப்பு; மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா

திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையத்திற்காக காத்திருப்பு; மக்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா

UPDATED : செப் 22, 2025 05:32 AMADDED : செப் 22, 2025 03:47 AM


Google News
Latest Tamil News
திருப்புவனம் மதுரை நகருக்கு வெகு அருகாமையில் இருப்பதால் நாளுக்கு நாள் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றன. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் சாலை, தீ விபத்து, நீரில் மூழ்கி இறப்பு உட்பட எவ்வித சம்பவங்களில் மீட்பு பணிக்கு மானாமதுரையில் இருந்துதான் வீரர்கள் செல்ல வேண்டும். மானாமதுரையில் இருந்து திருப்புவனம் நகரம் 30 கி.மீ.,தூரத்தில் உள்ளது.

இதனால் விபத்து சமயங்களில் மீட்பு பணிகள் மிகவும் தாமதமாகிறது. இதனால் விபத்து நேரங்களில் மதுரை, அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர்கள் வருகின்றனர். இதையடுத்து 1995ல் திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்து அனுப்பப்பட்டது. திருப்புவனத்திற்கு பின் விண்ணப்பித்த இளையான்குடி உள்ளிட்ட நகரங்களுக்கு தீயணைப்பு நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் திருப்புவனம் மட்டும் இன்று வரை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

கோடை காலங்களில் கரும்பு வயல்கள் தீ விபத்தில் சிக்கி விவசாயிகள் லட்சக்கணக்கான ரூபாயை இழந்து வேதனை அடைகின்றனர். திருப்புவனம் நகரம் தனிதாலுகாவாக 2013ல் அ.தி.மு.க., ஆட்சியின்போது அறிவிக்கப்பட்டது. அதன்பின் தீயணைப்பு நிலையம், டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்டவைகள் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று வரை எந்த வித நடவடிக்கையும் இல்லாததால் பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம், கல்லல், காளையார்கோயில் ஆகிய நகரங்களில் மட்டும்தான் தீயணைப்பு நிலையங்கள் இல்லை. திருப்புவனம் தாலுகாவில் நகர் மற்றும் சுற்றுவட்டார 154 கிராமங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் பேர் வசிக்கின்றனர். வருடத்திற்கு 4 ஆயிரம் எக்டேரில் நெல் விளைவிக்கப்படுகிறது. அறுவடைக்கு பின் கோடை காலங்களில் விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துள்ள வைக்கோல் கட்டுகள் தீவிபத்தில் எரிந்து நாசமாகி வருகின்றன.

பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் 90 கண்மாய்கள் உள்ளன. திருப்புவனம் வழியாக வைகை ஆறு செல்கிறது. நீர்வரத்து காலங்களில் நீச்சல் தெரியாமல் நீர் நிலைகளில் மூழ்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உயிரிழந்து வருகின்றனர். அவர்களின் உடல்களை மீட்க மானாமதுரையில் இருந்துதான் வரவேண்டியுள்ளது. எனவே திருப்புவனத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us