Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் எரிவாயு மயானத்தில் சோதனை

திருப்புவனம் எரிவாயு மயானத்தில் சோதனை

திருப்புவனம் எரிவாயு மயானத்தில் சோதனை

திருப்புவனம் எரிவாயு மயானத்தில் சோதனை

ADDED : மே 21, 2025 04:59 AM


Google News
திருப்புவனம்: திருப்புவனத்தில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் மூலதன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட எரிவாயு மயானம் இரு வருடங்களாக திறக்கப்படாததுடன் சேதமடைந்து இருப்பது குறித்து தினமலரில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து சோதனை ஓட்டம் நடந்தது.

திருப்புவனத்தில் நெல்முடிகரை மயானத்தில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் எரிவாயு மயானம் கட்டும் பணி 2023 ஏப்ரலில் தொடங்கப்பட்டு நவம்பரில் நிறைவடைந்தன. மயானத்தின் முன்புறம் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு பொதுமக்கள் அமர நிழற்குடை உள்ளிட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கோடியே ஐம்பது லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட மின் மயானத்தின் உட்புறம் உயிரிழந்தவர்களை எரிக்கும் போது ஏற்படும் வெப்பத்தின் அளவு உள்ளிட்டவை பரிசோதனை செய்யப்பட்டு விரைவில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

தரக்கட்டுப்பாடு ஆய்வு பணிகள் நடைபெறாததால் இரு வருடங்களாக திறக்கப்படாத நிலையில் கட்டடம் சேதமடைந்து பராமரிப்பு பணிகள் நடந்தன. இது குறித்து தினமலரில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து எரிவாயு மயானத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோட்டாட்சியர் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் பச்சை வாழை மரங்களை எரித்து இரு நாட்களாக சோதனை நடத்தினர். திருப்புவனத்தில் வயது மூப்பால் இறந்த 70 வயதான ஆண் உடலை எரித்து சோதனை நடத்தினர்.

அதிகாரிகள் கூறுகையில்: எரிவாயு மயானத்தில் மொத்தம் 10 சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆண் உடலை எரிக்க இரண்டு மணி நேரமும், பெண் உடலை எரிக்க ஒன்றரை மணி நேரமும் ஆகும். உடலை எரிக்க ஒரு சிலிண்டர் முதல் ஒன்றரை சிலிண்டர் வரை செலவாகும், நெல்முடிக்கரை மயானத்தில் பணிபுரிந்தவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் எரிவாயு மயானம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தனர். சோதனை ரீதியாக இறந்தவர் உடலை எரிக்க பத்து சிலிண்டர்களும் பயன்படுத்தப்பட்டதால் 45 நிமிடத்தில் உடல் முழுமையாக எரிக்கப்பட்டது. இறந்தவர் உடலை எரிக்க கட்டணம் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us