ADDED : மே 11, 2025 11:13 PM

காரைக்குடி; காரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா தேனாற்று பாலத்தில் தொடர் விபத்து, உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க நேரான ரோடு அமைத்து, பாலம் கட்டவேண்டும்.
காரைக்குடியிலிருந்து தேவகோட்டை செல்லும் முக்கிய சாலையில் தேனாற்று பாலம் உள்ளது.
முக்கிய சாலையான இச்சாலையில் தினந்தோறும் ஏராளமான பஸ்கள், கனரக வாகனங்கள், பள்ளிக் கல்லூரி வாகனங்கள், வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் சென்று வருகின்றனர். காரைக்குடி முதல் தேவகோட்டை ரஸ்தா வரை சாலைகள் அகலப்படுத்தப்பட்டது.
இதனால் தேனாற்று பாலம் குறுகலானது. அகலமான சாலையில் வாகனங்கள் வேகமாக செல்லும்போது, நடுவே திடீரென்று காட்சியளிக்கும் குறுகிய பாலத்தால் தொடர்ந்து விபத்து அபாயம் நிலவுகிறது.
மேலும் முக்கிய வளைவில் அமைந்துள்ள பாலத்தால், வாகனங்கள் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, அபாயமான வளைவில் திரும்பும் போது பால் வண்டியும் அரசு பஸ்சும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், 3 பேர் பலியாகினர். விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் வேகத்தடை அமைக்கும் பணி நடந்தது.
அதிவேகமாக வரும் வாகனங்கள் வேகத்தடையை பார்க்காமல் மேலும் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது.
தேனாற்றில் உள்ள பயன்பாடின்றி கிடக்கும் பழைய பாலத்தை அகற்றி, புதிதாக அகலமான பாலம் அமைத்தால் சாலையில் வளைவு இல்லாமல் நேராக வாகனங்கள் செல்ல முடியும்.
இதனால் விபத்துகளும் தவிர்க்கப்படும்.