Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காற்றில் பறக்கும் அரிசி ஆலை துாசு

காற்றில் பறக்கும் அரிசி ஆலை துாசு

காற்றில் பறக்கும் அரிசி ஆலை துாசு

காற்றில் பறக்கும் அரிசி ஆலை துாசு

ADDED : மே 31, 2025 11:33 PM


Google News
கீழடி: மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையை ஒட்டி இருபுறமும் நவீன அரிசி ஆலை கழிவுகளை பலரும் தொடர்ச்சியாக கொட்டி வருவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது.

நான்கு வழிச்சாலையை ஒட்டி பலரும் குப்பைகளை கொட்டி அசுத்தப்படுத்துவதுடன் சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

மதுரையை ஒட்டிய சிலைமான், புளியங்குளம், கீழடி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் தெர்மோகோல் அட்டை, மீன், கோழி இறைச்சி கழிவு, பிளாஸ்டிக் கழிவை கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக நான்கு வழிச்சாலையை ஒட்டி சிலைமான், புளியங்குளம், கீழடி உள்ளிட்ட பகுதிகளில் நவீன அரிசி ஆலை கழிவுகளை சாலையின் இருபுறமும் இரவு நேரங்களில் சரக்கு வாகனங்களில் வந்து கொட்டி வருகின்றனர்.

தற்போது காற்று வீசும் காலம் என்பதால் கரித்துகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்த்து வருகின்றன.

அரிசி ஆலைகளில் இருந்து வீணாகும் இந்த கரித்துகள்களில் நெல்லில் உள்ள கூர்மையான பகுதி அதிகளவு கலந்துள்ளது.

காற்றில் இவை பறந்து வாகன ஓட்டிகள், பஸ் பயணிகள் உள்ளிட்டவர்களின் கண்களில் விழுகிறது.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினசரி மதுரை செல்பவர்கள் பலரும் நான்கு வழிச்சாலையை பயன்படுத்தாமல் நவீன அரிசி ஆலை கழிவுகளுக்கு பயந்து மணலுார், சிலைமான், புளியங்குளம் வழியாக மதுரை சென்று வருகின்றனர்.

கழிவுகளை பற்றி அறியாமல் வரும் வெளியூர் சுற்றுலா பயணிகளே அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பல முறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நான்கு வழிச்சாலையை ஒட்டி குப்பை, அரிசி ஆலை கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us