/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அவலம்: தொழில்,வேலை வாய்ப்புகள் இல்லாததால் எஸ்.புதுாரை விட்டு வெளியேறும் இளைஞர்கள் அவலம்: தொழில்,வேலை வாய்ப்புகள் இல்லாததால் எஸ்.புதுாரை விட்டு வெளியேறும் இளைஞர்கள்
அவலம்: தொழில்,வேலை வாய்ப்புகள் இல்லாததால் எஸ்.புதுாரை விட்டு வெளியேறும் இளைஞர்கள்
அவலம்: தொழில்,வேலை வாய்ப்புகள் இல்லாததால் எஸ்.புதுாரை விட்டு வெளியேறும் இளைஞர்கள்
அவலம்: தொழில்,வேலை வாய்ப்புகள் இல்லாததால் எஸ்.புதுாரை விட்டு வெளியேறும் இளைஞர்கள்
ADDED : ஜூன் 13, 2025 11:43 PM

திருப்புத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இவ்வொன்றியத்தில் 21 ஊராட்சிகளும் 100க்கும் மேற்பட்ட சிறிய உட்கடை கிராமங்களும் உள்ளன. இப்பகுதி மக்களின் ஒரே வாழ்வாதாரத் தொழில் விவசாயம் மட்டுமே.
மழை காலங்களில் பெய்த தண்ணீரை நீர்நிலைகளில் தேக்கி வைத்தும், மலைகளில் இருந்து கசிந்து வரும் ஊற்று நீர், போர்வெல் நீர் கொண்டு ஆண்டு முழுவதும் விவசாயம் நடக்கும்.
மக்கள் குடும்பத்துடன் தோட்டங்களில் பயிர் செய்து அறுவடையான காய்கறி உள்ளிட்ட பயிர்களை பக்கத்து நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பது வழக்கம்.
சில ஆண்டுகளாக இப்பகுதியில் பல்வேறு காரணங்களால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
பண்ணை நிலங்கள் என்ற பெயரில் வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் நீர்நிலைகளில் தண்ணீர் தேக்குவது குறைந்துள்ளது. கூலி உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை என பல காரணங்களால் விவசாயிகள் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர்.
கல்லுாரி வசதி இல்லாதது, போக்குவரத்து வசதி குறைவு காரணங்களால் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியை தொடர முடியாமல் பாதியிலேயே விடும் நிலையும் உள்ளது.
இவ் ஒன்றியத்தில் சில ஆண்டுகளாக விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பலர் வாழ்வாதாரத்தை சரிசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். பல வீடுகளில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களை தேடி செல்ல துவங்கியுள்ளனர்.
பலர் வட்டிக்கு பணத்தை வாங்கி சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதை பயன்படுத்தும் சில கும்பல் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியும் வருகிறது.
இவ்வொன்றியத்தை பொறுத்தவரை குக்கிராமங்கள் அதிகம் இருக்கும் நிலையில் தொழில், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் இல்லை. இங்கு உள்ள இளைஞர்களுக்கு விவசாயத்தைத் தவிர வேறு எந்த வேலையும் இல்லை. விவசாயம் பொய்த்துப் போனதால் அவர்கள் வேலை வாய்ப்புக்காக அலைய வேண்டியுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் சில ஆண்டுகளில் இவ்வொன்றியம் தரிசு நில பூமியாக மாறி அனைவரும் விவசாயத்தை கை விடும் அபாயம் உள்ளது.
வேலை தேடும் இளைஞர்கள் வசதிக்காக இவ்வொன்றியத்தில் வணிக ரீதியான தொழிற்கூடங்கள், கூட்டுறவுத் துறை மூலம் விவசாய, வர்த்தக நிறுவனங்களை துவக்குவதன் மூலம் இளைஞர்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும். மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் கவனிக்கவேண்டும்.