/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ரோட்டில் பட்டாசு வெடிப்பால் தவிக்கும் வாகன ஓட்டிகள் ரோட்டில் பட்டாசு வெடிப்பால் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ரோட்டில் பட்டாசு வெடிப்பால் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ரோட்டில் பட்டாசு வெடிப்பால் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ரோட்டில் பட்டாசு வெடிப்பால் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மே 30, 2025 03:21 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் திருமணம்,இறுதி ஊர்வலம் உள்ளிட்டவற்றில் பலரும் பட்டாசுகளை வெடிப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
திருமண விழாக்கள் உள்ளிட்டவற்றில் மணமகன் அழைப்பு, சீர்வரிசை உள்ளிட்டவற்றிலும் இறுதி ஊர்வலத்தின் போதும் ரோட்டில் பட்டாசு வெடிப்பது வழக்கம். குறைந்த அளவிலான பட்டாசுகளால் எந்த பிரச்னையும் இல்லை.
ஆனால் கடந்த சில மாதங்களாக திருமண வீட்டார் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை பயன்படுத்துகின்றனர். பேப்பர் வெடியை பற்ற வைத்து மேலே துாக்கி வீசினால் அதில் துண்டு பேப்பர்கள் ஆயிரக்கணக்கில் பறக்கும். மேலும் அதிக ஒலி எழுப்பும் நாட்டு வெடிகளையும் பயன்படுத்துகின்றனர்.
இறுதி ஊர்வலத்தின் போது சிலர் போதையில் அணுகுண்டு உள்ளிட்டவற்றையும் பற்ற வைத்து ரோட்டில் வீசுவதால் சில நேரங்களில் மோதல் ஏற்பட்டு வருகிறது.
ஊர்வலத்தின் போது திருப்புவனம் நகரில் ரோட்டின் இருபுறமும் நீண்ட வரிசையுடன் வாகனங்கள் காத்து கிடக்க வேண்டியுள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடிவதில்லை.
பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதால் பட்டாசு வெடிப்பது அதிகரித்து வருகிறது.
திருப்புவனத்தில் பத்து திருமண மண்டபங்கள் உள்ளன. முகூர்த்த நாட்களில் குறைந்த பட்சம் கோயில்களில் நடைபெறும் திருமணங்களையும் சேர்த்து 15க்கும் மேற்பட்ட விசேஷங்கள் நடக்கின்றன. பெரும்பாலான விசேஷங்களுக்கு நரிக்குடி விலக்கில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து தான் ஊர்வலங்கள் தொடங்குகின்றன.
நெருக்கடி மிகுந்த இடத்தில் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இனி வரும் மாதங்களில் முகூர்த்த நாட்கள் அதிகம் என்பதால் பட்டாசை துாக்கி வீசி வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.