ADDED : மே 31, 2025 12:20 AM

திருப்புவனம்: திருப்புவனத்தில் டூவீலரில் விதிகளை மீறி சைக்கிள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.
திருப்புவனத்தில் பத்தாயிரம் வீடுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். மதுரை நகருக்கு அருகாமையில் திருப்புவனம் இருப்பதால் பலரும் மதுரை சென்று வர கடைகளுக்கு சென்று வர டூவீலர்களையே பயன்படுத்துகின்றனர். டூவீலர்களில் சாலை விதிகளை மீறி பொருட்களை கொண்டு சென்று விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
பழுதான சைக்கிள்கள், மரக்கட்டைகள், நெல் மூடைகள் உள்ளிட்டவற்றை அளவிற்கு அதிகமாக ஏற்றி செல்வதால் விபத்து நேரிட்டு வருகின்றன. மேலும் டூவீலரின் அகலத்தை கடந்து பொருட்களை கொண்டுசெல்வதால் சாலைகளில் நடந்து செல்பவர்கள் காயமடைகின்றனர்.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் திருப்புவனம் , மதுரை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான தொழிலுக்கு தேவையான பொருட்களை மினி வேன், லோடு ஆட்டோ உள்ளிட்டவற்றில் கொண்டு செல்லாமல் டூவீலர்களிலேயே எடுத்து செல்கின்றனர். மாவட்ட காவல்துறை நிர்வாகம் சாலை விதிகளை மீறி கொண்டு செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.