Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கரும்பு வயல்களில் தீ விபத்து; மின்வாரியம் மீது விவசாயிகள் புகார்

கரும்பு வயல்களில் தீ விபத்து; மின்வாரியம் மீது விவசாயிகள் புகார்

கரும்பு வயல்களில் தீ விபத்து; மின்வாரியம் மீது விவசாயிகள் புகார்

கரும்பு வயல்களில் தீ விபத்து; மின்வாரியம் மீது விவசாயிகள் புகார்

ADDED : ஜன 30, 2024 01:40 AM


Google News
திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரத்தில் கரும்பு வயல்களில் தொடர்ச்சியாக தீவிபத்து ஏற்பட்டு வரும் நிலையில் அதனை தடுக்க மின்வாரியம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

படமாத்துார் சர்க்கரை ஆலையை நம்பி திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு பயிரிடப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மூவாயிரத்து500 ஏக்கரில் கரும்பு பயிரிட்டு வந்த நிலையில் உரிய விலை கிடைக்காதது, அதிகரித்து வரும் செலவீனம், தீ விபத்து, நோய் தாக்குதல், விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் கரும்பு பயிரிடுவது குறைந்து விட்டது.

இந்தாண்டு திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கானுார், பச்சேரி, மழவராயனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 500 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து அதிக மகசூல் கிடைக்கும் 9356 என்ற ரக கரும்பு பயிரிட்டுஉள்ளனர். 10 மாதங்கள் கழித்து கரும்பு அறுவடை தொடங்க உள்ள நிலையில் மழை காரணமாக வயல்கள் ஈரமாக இருப்பதால் அறுவடைக்கு அனுமதி கிடைக்கவில்லை.

இந்நிலையில் திருப்பாச்சேத்தி வடக்கு கண்மாய்அருகே பயிரிடப்பட்டிருந்த கரும்பு தீவிபத்து காரணமாக எரிந்து நாசமாகின. இதில் விவசாயிகள் பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பூவந்தி, கீழடி ஆகிய துணை மின் நிலையங்கள் மூலம் ஐம்பதாயிரத்து 936 மின் இணைப்புகள் உள்ளன. இதில் விவசாய மின் இணைப்பு மட்டும் மூவாயிரத்து 945 இணைப்பு உள்ளன.

விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கரும்புகளுக்கு தண்ணீர் பாய்ச்ச பம்ப்செட்களுக்கு மும்முனை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்பு வயல்களுக்கு 75 மின் இணைப்புகள் வரை வழங்கப்பட்டுள்ளன.

வயல்களுக்கு நடுவே மின்கம்பங்கள் வைத்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. காற்றடிக்கும்காலங்களில் மின்கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி தீப்பொறி பறந்து கரும்பு வயல்களில் விழுவதால் தான் தீ விபத்து ஏற்படுகிறது. இதனை மின் வாரியம் தடுக்கலாம்.

மின் வழித்தட கம்பிகளுக்கு இடையே காற்றடிக்கும் காலங்களில் உரசாதவாறு பிளாஸ்டிக் கிளிப் பொருத்தலாம், ஆண்டிற்கு ஒரு முறை அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிளாஸ்டிக் கிளிப்புகளை மாற்றலாம், ஆனால் நடைமுறையில் இதனை மேற்கொள்ள மின்வாரியம் தயாராக இல்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மின்வாரியத்திடம் புகார் அளித்தும் இன்று வரை நடவடிக்கை இல்லை, என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us