Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு இழப்பீடு கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு

ADDED : செப் 27, 2025 04:07 AM


Google News
Latest Tamil News
திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் மின்சாரம் தாக்கி,பிற சம்பவங்களில் உயிரிழக்கும் கால்நடைகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

திருப்புவனம் வட்டாரத்தில் கீழடி, கொந்தகை, அல்லிநகரம், மணல்மேடு, பெத்தானேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.

மேய்ச்சல் நிலம் குறைந்து வரும் நிலையில் விவசாயிகள் வருவாய்க்காக கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

சமீப காலமாக போதிய பராமரிப்பு இன்றி லேசான காற்றுக்கே மின்கம்பிகள், மின்கம்பங்கள் சேதமடைந்து விடுகின்றன. மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகள், மேய்ப்பவர்கள் என பலரும் அறுந்து கிடக்கும் மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழக்கின்றனர்.

மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் கால்நடைகளுக்கு மின்வாரியம் சார்பில் இழப்பீடு வழங்கப்படும்.

இதற்காக மின்சாரம் தாக்கி உயிரிழந்த கால்நடைகளை முறையாக பிரேத பரிசோதனை செய்து, வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து படம், வீடியோ பதிவு செய்து அதன் பின் தான் அடக்கம் செய்கின்றனர். உரிய ஆவணங்கள் வழங்கியும் வருடக்கணக்கில் இழப்பீடு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர்.

கீழடி ரமேஷ், நிஜாமுதீன் ஆகியோரது கறவை மாடுகள் கடந்த 2023 ஏப்ரல் 29ல் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தன. இன்றுவரை மின்வாரியம் சார்பில் இழப்பீடு வழங்கவில்லை.

கீழடி ரமேஷ், நிஜாமுதீன் கூறுகையில்: எனது கறவை மாடு 60 ஆயிரம் ரூபாய், நிஜாமுதீன் மாடு 80 ஆயிரம் ரூபாய், மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தது குறித்து வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிட்ட உடன் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை செய்து அறிக்கையையும் சமர்ப்பித்து விட்டோம், இன்று வரை மின்வாரிய அதிகாரிகள் இழப்பீடு வழங்கவில்லை.

திருப்புவனம் புதுார் முருகேசன் என்பவரது கறவை மாடு கடந்த ஜூனில் உயிரிழந்த நிலையில் வயிறு உப்புசம் காரணமாக உயிரிழந்ததால் பேரிடர் மேலாண் நிதியில் இருந்து பணம் வழங்க முடியாது என வருவாய்த்துறையினர் கூறியுள்ளனர். தொடர்ச்சியாக கறவை மாடுகள் உயிரிழப்பிற்கு இழப்பீடு கிடைக்காததால் கால்நடை வளர்ப்பவர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே மாவட்ட நிர்வாகம் கால்நடை உயிரிழப்பிற்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us