ADDED : செப் 12, 2025 04:21 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் போட்டி போட்டு தடம் மாறும் தனியார் பஸ்கள் இடையே ஏற்படும் நேர பிரச்னையால் பஸ் ஸ்டாண்டுக்குள் பஸ்களை மறித்து அடாவடி செய்வது தொடர்கிறது.
மதுரையில் இருந்து சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதிக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலையில் கருங்காலக்குடி, சொக்கலிங்கபுரம் வழியாக நேர்வழியில் ஒரு ரூட்டும், அட்டப்பட்டி, சுக்காம்பட்டி என கிராமச்சாலைகள் வழியாக வேறு இரு ரூட்டுகளிலும் பெர்மிட் வழங்கப்பட்டுள்ளன.
கிராமங்கள் வழியாக செல்லும் போது துாரமும், நேரமும் அதிகமாவதால் அனைத்து பேருந்துகளும் கிராமங்களை புறக்கணித்து மெயின் ரோட்டிலேயே இயக்கப்படுகின்றன. கண்துடைப்புக்காக ஓரிரு முறை மட்டும் உரிய வழித்தடத்தில் செல்கின்றன. இந்நிலையில் ரூட் மாறி வரும்போது ஏற்படும் நேர பிரச்னையால் சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்டில் தனியார் பஸ் டிரைவர் கண்டக்டர்கள் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது.
செப்., 10ஆம் தேதி மாலை 6:15 மணிக்கு முன்கூட்டியே வந்த ஒரு தனியார் பஸ்சை மற்றொரு தனியார் பஸ் வழி மறித்து நிறுத்திக் கொண்டு இரண்டு பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இரு பஸ்களும் ரூட்களை மாற்றி இயக்குவதுடன் பிரான்மலை செல்லாமல் பாதியிலேயே கட் செய்வதையும் போட்டி போட்டு குற்றம் சுமத்தினர்.
இரண்டு பஸ்களிலும் ஏறிய பயணிகள் அரை மணி நேரம் கடும் அவதிக்கு உள்ளாகினர். போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பிரான்மலை வரை சென்று திரும்பாமல் பாதியிலேயே டிரிப் கட் செய்வதால் அதை நம்பியுள்ள பயணிகள் அவதிக்கு உள்ளாகும் நிலையில், மாவட்ட நிர்வாகம் அனைத்து பஸ்களும் உரிய வழித்தடத்தில் உரிய நேரத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.