Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மேலமருங்கூரில் ‛கைவிட்ட 'காவிரி குடிநீர்' திட்டம்; ஊருணியில் தேங்கிய நீரை குடிக்கும் மக்கள்

மேலமருங்கூரில் ‛கைவிட்ட 'காவிரி குடிநீர்' திட்டம்; ஊருணியில் தேங்கிய நீரை குடிக்கும் மக்கள்

மேலமருங்கூரில் ‛கைவிட்ட 'காவிரி குடிநீர்' திட்டம்; ஊருணியில் தேங்கிய நீரை குடிக்கும் மக்கள்

மேலமருங்கூரில் ‛கைவிட்ட 'காவிரி குடிநீர்' திட்டம்; ஊருணியில் தேங்கிய நீரை குடிக்கும் மக்கள்

ADDED : செப் 10, 2025 07:56 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை; சிவகங்கை மாவட்டம் மேலமருங்கூர் ஊராட்சி மக்களை, காவிரி கூட்டு குடிநீர் திட்டம் கைவிட்டதால், ஊருணியில் தேங்கிய நீரை 10 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எடுத்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலமருங்கூர் ஊராட்சியின் கீழ் மேலமருங்கூர், வலனை, முத்துப்பட்டினம், நேமம், பானாவயல், பீக்குளம், அல்லிவயல் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் 975 குடும்பங்களை சேர்ந்த 3,165 பேர் வரை வசிக்கின்றனர். கடந்த தி.மு.க., ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ராமநாதபுரம் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில், இந்த வழியாக குழாய் பொருத்தி காவிரி தண்ணீர் கொண்டு சென்றனர்.

இந்த தண்ணீரை பெற்று இப்பகுதி மக்கள் பயன் அடைந்து வந்தனர். காவிரி குடிநீரை தவிர்த்து இக்கிராமங்களில் கிடைக்கும் தண்ணீர் உவர்ப்பாகவும், சுவையின்றி சமையலுக்கு உகந்ததாக இல்லை.

காவிரி நீரை தவிர்த்தால், நேமம் கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் கிணறு மூலம் மட்டுமே அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைத்து வருகிறது.

கைவிட்ட காவிரி இந்நிலையில், காளையார்கோவில் ஒன்றியம் குண்டாக்குடை- - சிலுக்கப்பட்டி இடையே ரோடு அமைக்கும் பணிக்காக, குண்டாக்குடையில் மேம்பாலமும்,சிலுக்கப்பட்டி வரை தரைப்பாலமும் கட்டினர். அப்போது, காவிரி கூட்டுகுடிநீர் குழாய்களை சேதப்படுத்தி விட்டனர். இதனால் பல மாதங்களாக மேலமருங்கூர் ஊராட்சிக்குட்பட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டுகுடிநீர் வினியோகமே நடக்கவில்லை. இந்நிலையில் காவிரி குடிநீர் ஏற்றி வினியோகம் செய்வதற்காக கூடுதலாக பானாவயல், பீக்குளம், முத்துப்பட்டினம் ஆகிய 3 இடங்களில் கட்டிய தலா 10,000 லிட்டர் மேல்நிலை தொட்டியும் ஒரு ஆண்டாக காட்சி பொருளாகவே உள்ளது.

ஊருணி நீரை சேகரிக்கும் மக்கள் காவிரி கூட்டுகுடிநீர் கைவிட்டதால், மீண்டும் மக்கள் விளாங்குளத்தில் உள்ள ஊருணியில் தேங்கியிருக்கும் தண்ணீரை குடங்களில் எடுத்து வந்து சமையலுக்கும், குடிநீருக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். காவிரி கூட்டு குடிநீரே வராத நிலையில், மேலமருங்கூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் ரூ.47 ஆயிரம் வரை குடிநீர் கட்டணமாக செலுத்தி வருகின்றனர். சேதமான குடிநீர் குழாய்களை செப்பனிட்டு, மீண்டும் மேலமருங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பல முறை மக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.

பெரும்பாலான கிராம மக்கள் வாகனங்களில் வரும் நீரை குடம் ரூ.12 கொடுத்து வாங்கும் நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us