Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அசுத்தமாகிறது வைகை: வேதனையில் பக்தர்கள்

அசுத்தமாகிறது வைகை: வேதனையில் பக்தர்கள்

அசுத்தமாகிறது வைகை: வேதனையில் பக்தர்கள்

அசுத்தமாகிறது வைகை: வேதனையில் பக்தர்கள்

ADDED : ஜூலை 31, 2024 04:33 AM


Google News
திருப்புவனம் : திருப்புவனம் வழியாக பாய்ந்தோடும் வைகை நதி மாசடைந்து துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற தினங்களில் இந்துக்கள் மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபடுவது வழக்கம்.

தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்புவனம் வந்து முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி செல்கின்றனர். அமாவாசை தினங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் வழங்க பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

வெளியூர் பக்தர்களிடம் தனியாக வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணமும் வசூலிக்கின்றனர். ஆனால் பக்தர்களுக்கு எந்த வித வசதியும் செய்து தருவது கிடையாது. வெயில், மழை காலங்களிலும் வெட்ட வெளியில் திதி, தர்ப்பணம் வழங்கப்படுகிறது. வைகை ஆற்றில் பக்தர்கள் பாதுகாப்பாக இறங்கி சென்று நீராட பாதை வசதி கூட கிடையாது.

ஆற்றில் ஆங்காங்கே பாறை இருப்பதால் பக்தர்கள் அதில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். திதி, தர்ப்பணம் வழங்கும் பக்தர்கள் சிலர் பூஜை பொருட்கள், உடுத்தி இருக்கும் துணிகள் உள்ளிட்டவற்றை ஆற்றிலேயே போட்டு அசுத்தப்படுத்தி வருகின்றனர். நீர் வரத்து இல்லாத காலங்களில் மதுரை நகரின் சாக்கடையும் இந்த இடத்தில் தேங்கி நிற்கிறது.அதில்தான் பக்தர்கள் நீராடி வருகின்றனர்.

பக்தர்கள் கூறுகையில்: திதி,தர்ப்பணம் வழங்க ஷெட் போன்ற அமைப்பு ஏற்படுத்த வேண்டும், வெளியூர் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், குளியலறை, உடைமாற்றும் அறை , பொருட்களை வைக்க பாதுகாப்பு அறை உள்ளிட்டவை ஏற்படுத்த வேண்டும், இல்லை என்றால் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது, என்றனர்.

சிவகங்கை தேவஸ்தானம் கட்டணம் வசூலிப்பதால் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதி செய்து தர தயக்கம் காட்டுகின்றனர்.

பேரூராட்சி சார்பில் குளியல் தொட்டி வசதி மட்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுவும் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது.

திதி வழங்கும் இடத்தில் பலரும் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். ஆக., 4ம் தேதி ஞாயிறு அன்று ஆடி அமாவாசை என்பதால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வர உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us