/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பராமரிப்பின்றி உடற்பயிற்சி கூடம்; திருப்புத்துார் அருகே ரூ.30 லட்சம் விரயம்பராமரிப்பின்றி உடற்பயிற்சி கூடம்; திருப்புத்துார் அருகே ரூ.30 லட்சம் விரயம்
பராமரிப்பின்றி உடற்பயிற்சி கூடம்; திருப்புத்துார் அருகே ரூ.30 லட்சம் விரயம்
பராமரிப்பின்றி உடற்பயிற்சி கூடம்; திருப்புத்துார் அருகே ரூ.30 லட்சம் விரயம்
பராமரிப்பின்றி உடற்பயிற்சி கூடம்; திருப்புத்துார் அருகே ரூ.30 லட்சம் விரயம்
ADDED : செப் 24, 2025 06:34 AM

கிராமங்களில் இளைஞர்கள், முதியவர்கள் அனைவரும் உடல் தகுதியைப் பெறும் நோக்கத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கிராமங்களில் உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது.
திருப்புத்துார் ஒன்றியம் தேவரம்பூரில் ரூ 30 லட்சம் செலவில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது.
அதற்கு பின்னர் மின்இணைப்பு வசதி, ஆழ்குழாய், பூங்காவில் செடி நடவு என்று கூடுதல் செலவில் பல பணிகள் நடந்தது. பூங்காவில் நடைபயிற்சிக்கான நடைபாதை, நடுவில் புல்வெளி, பாட்மின்டன் மைதானம் அமைக்கப்பட்டிருந்தது.
பூங்காவில் சிறுவர்கள் விளையாட ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட பல உபகரணங்கள் நிறுவப்பட்டிருந்தது. இளைஞர்கள் உடற்பயிற்சிக்கு தனி உள்ளரங்கம் அமைக்கப்பட்டு, நவீன உடற்பயிற்சி சாதனங்கள் நிறுவப்பட்டிருந்தது. இங்கு வருவோர் பயன்படுத்த வசதியாக கழிப்பறையும் கட்டப்பட்டிருந்தது.
திட்டம் ஆமை வேகத்தில் நடைபெற்று முடிந்தது. துவக்கத்தில் சில மாதங்கள் கிராமத்தினர் பூங்காவை பயன்படுத்தினர். பின்னர் பாதுகாக்கவும், பராமரிக்கவும் பணியாளர் இல்லாததால் பராமரிப்பின்றி கழிப்பறை சேதமடைந்தது.
மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. உள்ளரங்க தரைகள் பெயர்ந்தன. நடைபாதைகள் பல இடங்களில் பெயர்ந்தன. உபகரணங்கள் துருப்பிடிக்க துவங்கின. சில கருவிகள் திருடு போயின. ஊஞ்சல் காணாமல் போனது.
முன்னாள் ஊராட்சி தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், 'ஊராட்சி பராமரிப்பில் இந்த கூடம் உள்ளது. ஆனால் பராமரிக்க நிதி இல்லை. கண்காணிக்க பணியாளர் வசதியும் இல்லை. நூறுநாள் பணியாளர்கள் மூலம் சிறிய பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டது. தற்போது முழுமையாக பராமரிக்க மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கழிப்பறை புனரமைக்க வேண்டும்.அத்துடன் காவலர் நியமித்து பாதுகாக்க வேண்டும். இளைஞர் குழு மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்' என்றார்.
உடற்பயிற்சி கூடம் முழுமையாக சேதமடையும் முன் பராமரிப்பிற்கான நிதி ஒதுக்கீடு செய்து, புனரமைக்கும் பணியை நிறைவேற்ற வேண்டும். உள்ளூர் மகளிர் அல்லது தன்னார்வலர் குழுவிடம் ஒப்படைத்தால் மக்களுக்கு திட்டத்தின் பலன் முழுமையாக சேரும்.