/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ அறிவிப்பில்லாத ரயில்வே கேட் பணி காரைக்குடியில் மக்கள் அவதி அறிவிப்பில்லாத ரயில்வே கேட் பணி காரைக்குடியில் மக்கள் அவதி
அறிவிப்பில்லாத ரயில்வே கேட் பணி காரைக்குடியில் மக்கள் அவதி
அறிவிப்பில்லாத ரயில்வே கேட் பணி காரைக்குடியில் மக்கள் அவதி
அறிவிப்பில்லாத ரயில்வே கேட் பணி காரைக்குடியில் மக்கள் அவதி
ADDED : ஜூலை 11, 2024 05:15 AM

காரைக்குடி: காரைக்குடி ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் பகுதியில் முன்னறிவிப்பு இல்லாமல் பராமரிப்பு பணி நடந்ததால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
காரைக்குடி நகராட்சியை ஒட்டி அமைந்துள்ள கோட்டையூர் பேரூராட்சிக்குட்பட்ட ஸ்ரீராம் நகர் விரிவாக்க பகுதியாகும். அழகப்பா பல்கலை., அழகப்பா இன்ஜி., கல்லுாரி அழகப்பா உடற்கல்வியியல் கல்லுாரி உட்பட பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட் வழியாக கோட்டையூர் பள்ளத்துார் கானாடுகாத்தான் புதுவயல் சாக்கோட்டை பகுதிகளை சேர்ந்த மக்கள் தினமும் செல்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஸ்ரீராம் நகர் ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடந்தது.
நேற்று மீண்டும் ரயில்வே கேட்டில் பராமரிப்பு பணி நடந்தது. இந்தப் பணி குறித்து முன்னதாக முறையான அறிவிப்பு ஏதும் செய்யாமல் நேற்று திடீரென்று நடந்ததால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
வாகன ஓட்டிகள் கூறுகையில்: நேற்று காலை வந்து பார்த்த போது திடீரென்று ரயில்வே கேட்டில் பணி நடந்து கொண்டிருந்தது. காலை 8:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை ரயில்வே கேட் பராமரிப்பு பணி காரணமாக மூடப்படும் என்று சிறிய பேப்பரில் ஒட்டப்பட்டிருந்தது.
மாற்று வழியில் செல்லும்படி தெரிவிக்கின்றனர். இந்தப் பாதையை விட்டால் பலருக்கு எந்த பாதையை பயன்படுத்துவது என்றே தெரியாது. முறையாக 2 நாட்களுக்கு முன்பே முன்னறிவிப்பு செய்து இதுபோன்று பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில்: பராமரிப்பு பணி மேற்கொள்ளும் மிஷின்கள் திடீரென்று வந்ததால், முன்னறிவிப்பு செய்வதற்கு எங்களுக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தை விட்டால் பின்னர் தாமதம் ஏற்படும். நேற்று முன்தினம் மாலை கேட்டின் அருகே பணி குறித்து எழுதி ஒட்டப்பட்டுள்ளது.