திருப்புவனம் வைகை ஆற்றில் தடுப்பணை
திருப்புவனம் வைகை ஆற்றில் தடுப்பணை
திருப்புவனம் வைகை ஆற்றில் தடுப்பணை
ADDED : ஜூலை 05, 2024 04:48 AM
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் கானுார், பழையனுார் கண்மாய்கள் பயன் பெறும் வகையில் தடுப்பணை கட்டப்பட உள்ள இடத்தை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்புவனம் அருகேயுள்ள கானுார் கண்மாய்க்கு வைகை ஆற்றின் இடது பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கானுார் கால்வாய் முகப்பு விரகனுார் அணை அருகே இருப்பதால் தண்ணீர் திறப்பின் போது கண்மாய்க்கு தண்ணீர் செல்ல நீண்ட நாட்களாகின்றன. இதை தவிர்க்க ஒவ்வொரு வருடமும் வைகை அணை நீர் திறப்பின் போது திருப்புவனம் வைகை ஆற்றின் குறுக்கே மணல் கொண்டு தடுப்பு அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இதனால் வருடம்தோறும் செலவு அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க திருப்புவனம் புதூர் வைகை ஆற்றுப்படுகையில் தடுப்பணை அமைத்து கானூர், பழையனூர் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியதையடுத்து நபார்டு வங்கி நிதியுதவியுடன் தடுப்பணை கட்டப்பட உள்ளது.
தடுப்பணை அமைய உள்ள இடத்தை நேற்று காலை நபார்டு வங்கி ஆலோசகர் செல்வின்சவுந்தரராஜன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார், கீழ்வைகை வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் தங்கராஜ், உதவி செயற்பொறியாளர் மோகன்குமார், உதவி பொறியாளர்கள் வினோத்குமார், சுரேஷ்குமார் மற்றும் விவசாயிகள் பார்வையிட்டனர். விரைவில் பணி தொடங்க உள்ளதாகவும் கானூர், பழையனூர் உள்ளிட்ட 17 கண்மாய்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள்தெரிவித்தனர்.