/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ வெளி மாநிலங்களுக்கு செல்லும் திருப்புவனம் தேங்காய் வெளி மாநிலங்களுக்கு செல்லும் திருப்புவனம் தேங்காய்
வெளி மாநிலங்களுக்கு செல்லும் திருப்புவனம் தேங்காய்
வெளி மாநிலங்களுக்கு செல்லும் திருப்புவனம் தேங்காய்
வெளி மாநிலங்களுக்கு செல்லும் திருப்புவனம் தேங்காய்
ADDED : ஜூலை 05, 2024 05:04 AM

திருப்புவனம்: திருப்புவனம் தேங்காய் குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம், கானுார், கல்லுாரணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.
பெரும்பாலும் இப்பகுதி விவசாயிகள் நீண்ட கால பலன் தரும் நெட்டை மரங்களையே வளர்த்து வருகின்றனர். நடவு செய்த 10 வருடங்களுக்கு பின் தான் பலன் தர தொடங்கும்.
அதுவரை விவசாயிகள் ஊடுபயிராக வாழை, கீரை உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து செலவீனத்தைசரி செய்து கொள்வது வழக்கம், 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் பறிப்பு நடைபெறுகிறது. ஒரு மரத்திற்கு 20 முதல் 40 தேங்காய் வரை கிடைக்கும், திருப்புவனத்தில் 10க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.
கிலோ 10 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை கொள்முதல் செய்து அவற்றை கூலி ஆட்கள் மூலம் மட்டைகளை எடுத்து வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
மற்ற பகுதி தேங்காய்களை விட திருப்புவனம் பகுதி தேங்காய் ருசி அதிகம், எண்ணெய் சத்தும் அதிகம், மேலும் தேங்காய் 30 நாட்கள் வரை கெடாது என்பதால் வெளிமாநில வியாபாரிகள் திருப்புவனம் பகுதி தேங்காய்களை விரும்பி வாங்குகின்றனர். திருப்புவனத்தில் இருந்து நேரடியாக லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கு தேங்காய் அனுப்பப்படுகின்றன.
வியாபாரிகள் கூறுகையில்: திருப்புவனத்தில் இருந்து இந்துார் செல்ல டோல்கேட் உள்ளிட்டவற்றை தாண்டி செல்ல பத்து நாட்கள் வரை ஆகும், தற்போது ஐந்து முதல் ஏழு நாட்களில் சென்று விடலாம், லாரி வாடகை ஒரு லட்ச ரூபாய் வரை ஆகும்.பெரும்பாலும் இங்கிருந்து தேங்காய் ஏற்றி கொண்டு சென்று மீண்டும் திரும்பி வரும் போது அங்கிருந்து பயறு வகைகளை ஏற்றி வருவார்கள்.
இதனால் லாரி உரிமையாளர்களுக்கு ஒரளவு வாடகை கட்டுபடியாகும், தற்போது வெளி மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் தேங்காய்கள் அதிகமாக விரும்பி வாங்குகின்றனர். மற்ற மாநிலங்களில் விளைச்சல் பாதித்திருப்பதால் திருப்புவனம் பகுதி தேங்காய்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது, என்றனர்.