/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நீண்ட இழுபறியில் கால்வாய் கட்டும் பணி தவியாய் தவிக்கும் மக்கள் நீண்ட இழுபறியில் கால்வாய் கட்டும் பணி தவியாய் தவிக்கும் மக்கள்
நீண்ட இழுபறியில் கால்வாய் கட்டும் பணி தவியாய் தவிக்கும் மக்கள்
நீண்ட இழுபறியில் கால்வாய் கட்டும் பணி தவியாய் தவிக்கும் மக்கள்
நீண்ட இழுபறியில் கால்வாய் கட்டும் பணி தவியாய் தவிக்கும் மக்கள்
ADDED : ஜூன் 18, 2024 07:08 AM

திருப்புவனம் ; திருப்புவனம் புதூரில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சாக்கடை கால்வாயில் பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் பிரமனூர், வில்லியரேந்தல், பனையனேந்தல் உள்ளிட்ட கிராமமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் புதூர் பகுதியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்ல கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் வடிகால் வசதி செய்யப்பட்டது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குடியிருப்புகள் காரணமாக கழிவு நீர் கால்வாயின் அகலம் குறைவாக இருப்பதால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியது. மழை காலங்களில் தேசிய நெடுஞ்சாலையில் 200 மீட்டர் தூரத்திற்கு சாக்கடை நீர் தேங்குவதால் சுகாதார கேடு நிலவுவதுடன் வாகனப்போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
இதனை தவிர்க்க புதூர் பள்ளி வாசல் எதிரே கால்வாய் பாலத்தை அகலப்படுத்தி உயரமாக அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து கடந்த ஒரு மாதத்திற்கு முன் பணிகளை தொடங்கியது.
நான்கு நாட்களில் பணிகள் முடிவடையும் அதுவரை இப்பாதையில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படுவதாகவும் அறிவித்தனர்.
இதனால் திருப்புவனம் புதூர் வழியாக பிரமனூர், பனையனேந்தல் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் வாகனங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நான்கு வழிச்சாலையை சுற்றி செல்கின்றன. பள்ளிகள் திறந்தநிலையில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் கழிவு நீர் ரோடு வழியாக சிறிது தூரம் சென்று மீண்டும் கழிவு நீர் கால்வாயில் கலக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மாதக்கணக்கில் கழிவு நீர் ரோட்டில் செல்வதால் நடந்து செல்ல முடியவில்லை. வங்கி வாசலில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் வங்கிக்கு செல்ல முடியவில்லை.
இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கும் சாக்கடை நீரில்தான் நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.