Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காளையார்கோயில், மானாமதுரை மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் ஸ்கேன் பரிசோதனை இல்லை

காளையார்கோயில், மானாமதுரை மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் ஸ்கேன் பரிசோதனை இல்லை

காளையார்கோயில், மானாமதுரை மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் ஸ்கேன் பரிசோதனை இல்லை

காளையார்கோயில், மானாமதுரை மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாததால் ஸ்கேன் பரிசோதனை இல்லை

ADDED : ஜூன் 20, 2024 04:44 AM


Google News
சிவகங்கை: காளையார்கோவில், மானாமதுரை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்க டாக்டர் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை இருப்பதாக நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.

காளையார்கோவில் அரசு மருத்துவமனை சிவகங்கை - தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினசரி 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். தினமும் 200க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு பொது மருத்துவம், பிரசவம், குடும்பக்கட்டுபாடு, விபத்து உள்ளிட்ட தீவிர சிகிச்சைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகிறது.

டாக்டர் பற்றாக்குறை


பொதுவாக கல்லீரல், மண்ணீரல்,சிறுநீரகம்,சிறுநீர் பை, பித்தப்பை போன்ற உள்ளுறுப்பு பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்க அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.இது தவிர வயிற்று வலி, இதர வயிறு பிரச்னையால் பாதிக்கப்படுவோர், கர்ப்பிணிகளுக்கும் ஸ்கேன் எடுக்கப்படுகிறது.

இதற்காக மருத்துவமனையில் ஸ்கேன் இயந்திரம் உள்ளன. ஆனால் ஸ்கேன் எடுக்க ரேடியாலஜி டாக்டர் காளையார்கோவில் மருத்துவமனையில் இல்லை. இங்கு வரும் கர்ப்பிணிகள், நோயாளிகள் ஸ்கேன் எடுக்க முடியாமல் தனியார் மருத்துவமனைக்கும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கும் செல்கின்றனர். மானாமதுரை அரசு மருத்துவமனையிலும் ஸ்கேன் எடுப்பதில்லை. மாவட்டத்தில் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் ரேடியாலஜிஸ்ட் டாக்டர் பற்றாக்குறை உள்ளது.

சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் ரேடியாலஜிஸ்ட் டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது.மருத்துவக் கல்லுாரியில் ஸ்கேன் எடுக்கும் ரேடியாலஜிஸ்ட் பிரிவில் கடந்த காலங்களில் பேராசிரியர் உட்பட 7 பேர் இருந்தனர். ஆனால், தற்போது மூன்று உதவி பேராசிரியர்கள் மட்டுமே ஸ்கேன் எடுக்கின்றனர். இவர்களால் ஒரு நாளைக்கு 60 பேருக்கு தான் ஸ்கேன் எடுக்க முடிகிறது.

காரைக்குடி


காரைக்குடி வ.சூரக்குடி சாலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. காரைக்குடி மட்டுமின்றி புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் சிகிச்சைக்காகவும், பிரசவத்திற்காகவும் வந்து செல்கின்றனர்.

மாதத்திற்கு 200 க்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடக்கிறது. இந்த மருத்துவமனையில், போதிய மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள் என பல்வேறு காலிப் பணியிடங்கள் உள்ளன.

ரேடியாலஜிஸ்ட் பணியிடம் மீண்டும் காலியானதால் கடந்த மூன்று மாதங்களாக ஸ்கேன் எடுக்க முடியாமல் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகள் ஸ்கேன் எடுப்பதற்கு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

காலியாக உள்ள ரேடியாலஜிஸ்ட் பணியிடத்தை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவே தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ரேடியாலஜிஸ்ட் பிரிவில் டாக்டர்களை பணியமர்த்தி ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* திருப்புத்துாரில் தாலுகா அளவிலான அரசு மருத்துவமனை கடந்த 1972 முதல் இயங்கி வருகிறது. மக்கள் தொகை அதிகரிப்பிற்கேற்ப டாக்டர்களின் எண்ணிக்கை இந்த மருத்துவமனையில் அதிகரிக்கப்படவில்லை. இங்கு நோயாளிகள் வருகை குறைந்து வருகிறது. தற்போது 75 படுக்கை வசதியுள்ள இந்த மருத்துவமனைக்கு 8 டாக்டர்கள் இருக்க வேண்டும். நிரந்தரமாக 3 டாக்டர்கள் உள்ளனர். அதில் ஒருவர் மயக்க மருந்து டாக்டர், அறுவைசிகிச்சை டாக்டர், கண் டாக்டர் ஒருவர். மேலும் மாற்றுப்பணியாக இரு டாக்டர்கள் வாரத்திற்கு சில நாட்கள் வருகின்றனர்.

ஆனால் அவசியமான

குழந்தை மருத்துவர், எலும்பு சிகிச்சை மருத்துவர், மகப்பேறு மருத்துவர் இல்லாமல் மருத்துவமனையில் பொதுமக்கள் , குறிப்பாக கர்ப்பிணிகள் பாதிக்கப்படுகின்றனர். வழக்கமாக மாதத்திற்கு 25 மகப்பேறு சிகிச்சை இங்கு நடைபெறும். தற்போது 6,7 தான் நடைபெறுகிறது. மகப்பேறு மருத்துவம் பாதிக்கப்படுவதால் படுக்கைகள் முழுமையாக பயன்படவில்லை.

15 ஆண்டுகளுக்கு முன்பு 11 டாக்டர்கள் செயல்பட்ட இந்த மருத்துவமனையில் தற்போது பெயரளவிலேயே மருத்துவர்கள் உள்ளனர். மழை காலம் வரும் முன்பாக போதிய டாக்டர்களை நியமிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.

புதிதாக கட்டப்பட்ட ஐ.சி.யூ. வார்டுக்கு போதிய பாத்ரூம் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாமல் உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us