ADDED : ஜூன் 07, 2024 05:18 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் செயின் மற்றும் அலைபேசி பறிப்பு சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிய முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் தினசரி தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க திருப்புவனம் வந்து செல்கின்றனர்.
இதுதவிர கோயில், திருமண மகால்களிலும் முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமண வைபவங்கள், காதணி விழாக்கள் நடைபெறுகின்றன.
விழாக்களில் பங்கேற்க வரும் பெண்கள் பலரும் தங்க, வைர நகைகளை அணிந்து வருகின்றனர்.இவர்களை குறிவைத்து செயின் பறிப்பு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
திருடர்கள் ஹெல்மெட் அணிந்து டூவீலர்களில் செயின் பறிப்பில் ஈடுபடுவதால் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதாக போலீசார் புலம்புகின்றனர்.
கடந்த மாதம் 19ம் தேதி நெரிசல் மிகுந்த மார்க்கெட் வீதியில் நடந்து சென்ற பெண்ணிடம் ஒன்பது பவுன் தங்க செயினை டூவீலரில் வந்த நபர் அறுத்து சென்றார்.
இன்று வரை சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்றே தெரியவில்லை. இதே போல அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களிடம் ஒரு கும்பல் அலைபேசியை பறித்து சென்று வருகிறது.
பெரும்பாலான சம்பவங்களில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்வதில் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.