/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கீழடி திறந்த வெளி அருங்காட்சியக நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு கீழடி திறந்த வெளி அருங்காட்சியக நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு
கீழடி திறந்த வெளி அருங்காட்சியக நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு
கீழடி திறந்த வெளி அருங்காட்சியக நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு
கீழடி திறந்த வெளி அருங்காட்சியக நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு
ADDED : ஜூன் 21, 2024 12:38 AM
கீழடி:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைக்க கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு இம்மாத இறுதிக்குள் இழப்பீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் நடந்த அகழாய்வுகளுக்கு கதிரேசன், கார்த்திக் உள்ளிட்ட 17 பேர் நிலங்களை வழங்கினர். தென்னந்தோப்புக்கு இடையில் அகழாய்வு நடந்த போது மரங்களுக்கு தண்ணீர் கூட பாய்ச்ச முடியாமல் நில உரிமையாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
அ.தி.மு.க., ஆட்சியின் போது அகழாய்வு பணி முடிந்த பின் நிலம் மீண்டும் உரிமையாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. தி.மு.க., அரசு பொறுப்பேற்ற உடன் அகழாய்வு நடந்த இடங்கள் நில உரிமையாளர்களிடம் கையகப்படுத்தப்பட்டு திறந்தவெளி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என அறிவித்தது.
நிலத்தின் சந்தை மதிப்பை விட நான்கு மடங்கு அதிகம் வழங்க நில உரிமையாளர்கள் வலியுறுத்தினர். இதுதொடர்பாக பலமுறை அரசுடன் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.
வருவாய்த்துறையினர் கீழடியில் நிலங்களை ரக வாரியாக பிரித்து ஒரு சென்ட் 10 ஆயிரம்முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை என நிர்ணயித்தனர். நான்கு வழிச்சாலை அருகே உள்ளவை விளை நிலம் என்பதால் நில மதிப்பை உயர்த்தி வழங்க உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
மதுரையில் இருந்து 7 கி.மீ., துாரத்திலுள்ள கீழடியில் சந்தை மதிப்பு. 1 சென்ட் மூன்று முதல் நான்கு லட்ச ரூபாய் வரை உள்ள நிலையில் ரக வாரியாக பிரித்து அதிலும் 10 ஆயிரம் என குறைந்தபட்ச தொகையாக நிர்ணயித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக நில உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர். இதனால் பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நில உரிமையாளர்களுக்கு ஒரு சென்ட்டுக்கு ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் தருவதாக உறுதியளித்ததுடன், இம்மாத இறுதிக்குள் பணம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தது. இதனையடுத்து 10ம் கட்ட அகழாய்விற்கு நிலம் வழங்க உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து தான் அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஜூன் 18 ல் காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார்.
நில உரிமையாளர்கள் கூறியதாவது:
'தொல்லியல் துறை அதிகாரிகள் கொந்தகை, அகரத்தில் திறந்த வெளி அருங்காட்சியகம் அமைப்பது வீண் என தெரிந்தும் லட்சக்கணக்கில் செலவு செய்து ஷெட் அமைத்து பயன்பாடின்றி கிடக்கிறது. 2600 ஆண்டுகளுக்கு முந்தைய பொக்கிஷத்தை வழங்கும் எங்களுக்கு இழப்பீடு தர மட்டும் மனம் வரவில்லை.
'தற்போது வழங்கப்படும் தொகை எங்களுக்கு எந்த விதத்திலும் பயன் தராது. இருந்தாலும் பாரம்பரியத்தை கண்டறிய நிலம் வழங்கினோம் என்பதற்காக சம்மதித்துள்ளோம்,' என்றனர்.