/உள்ளூர் செய்திகள்/சேலம்/தாசில்தார் ஆபீசில் வாலிபர் தர்ணா; கிடைத்தது 'ரிலேசன்ஷிப்' சான்றிதழ்தாசில்தார் ஆபீசில் வாலிபர் தர்ணா; கிடைத்தது 'ரிலேசன்ஷிப்' சான்றிதழ்
தாசில்தார் ஆபீசில் வாலிபர் தர்ணா; கிடைத்தது 'ரிலேசன்ஷிப்' சான்றிதழ்
தாசில்தார் ஆபீசில் வாலிபர் தர்ணா; கிடைத்தது 'ரிலேசன்ஷிப்' சான்றிதழ்
தாசில்தார் ஆபீசில் வாலிபர் தர்ணா; கிடைத்தது 'ரிலேசன்ஷிப்' சான்றிதழ்
ADDED : ஜன 08, 2025 07:02 AM
ஓமலுார்: ஓமலுார் அருகே காமலாபுரத்தை சேர்ந்தவர் ராஜா, 27. அதே பகுதியில் ஓட்டல் நடத்துகிறார். அவரது சகோதரி உறவுமுறையான, சென்னையில் உள்ள கிரேட்டா, 34, என்பவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு, இரு ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கல்லீரலை தானமாக கொடுக்க ராஜா முன்வந்தார். இதற்கு மருத்துவர்கள், 'உறவு முறை' சான்றிதழ்(ரிலேசன்ஷிப் சர்டிபிகேட்) கேட்டனர். அவர் கடந்த, 30ல் மனு அளித்து, வி.ஏ.ஓ., - ஆர்.ஐ.யிடம் கையெழுத்து பெற்று, ஓமலுார் தாலுகா அலுவலகத்தில் கொடுத்தார்.
அங்கு நேற்று முன்தினம் ராஜா சென்றபோது, 'தாசில்தார் மீட்டிங் சென்றுவிட்டார், நாளை வாருங்கள்' என, அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நேற்று காலை, 10:00 மணிக்கு அலுவலகம் சென்ற ராஜா, நீண்ட நேரம் காத்திருந்தும், தாசில்தார் கையெழுத்து பெற முடியவில்லை. இதனால் மாலை, 5:45 மணிக்கு தாசில்தார் அறை முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
இதுகுறித்து ராஜா கூறுகையில், 'சகோதரிக்கு உடனே உறுப்பு மாற்று சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. தாமதம் செய்தால் உயிருக்கு பாதிப்பு ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் காலம் தாழ்த்தியதால் தர்ணாவில் ஈடுபட்டேன்' என்றார்.
பின் அதிகாரிகள், ராஜாவை அழைத்துக்கொண்டு, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மீட்டிங்கில் இருந்த, தாசில்தார் ரவிக்குமாரிடம், கையெழுத்து வாங்கி கொடுத்து அனுப்பினர்.