/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏற்காடு 48வது கோடை விழா நாளை தொடக்கம் அலங்கார வடிவமைப்பு, மலர் தொட்டிகள் தயார் ஏற்காடு 48வது கோடை விழா நாளை தொடக்கம் அலங்கார வடிவமைப்பு, மலர் தொட்டிகள் தயார்
ஏற்காடு 48வது கோடை விழா நாளை தொடக்கம் அலங்கார வடிவமைப்பு, மலர் தொட்டிகள் தயார்
ஏற்காடு 48வது கோடை விழா நாளை தொடக்கம் அலங்கார வடிவமைப்பு, மலர் தொட்டிகள் தயார்
ஏற்காடு 48வது கோடை விழா நாளை தொடக்கம் அலங்கார வடிவமைப்பு, மலர் தொட்டிகள் தயார்
ADDED : மே 22, 2025 01:31 AM
சேலம், ஏற்காட்டில், 48வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி, நாளை தொடங்கி, வரும், 29 வரை நடக்க உள்ளது. ஏற்காடு திரையரங்கில், மாலை, 4:00 மணிக்கு விழா தொடங்க உள்ளது. கலெக்டர் பிருந்தாதேவி வரவேற்பார்.
வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து, கோடை விழா, மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பார். வனத்துறை அமைச்சர் கண்ணப்பன் சிறப்பு விருந்தினராக பேசுவார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நலத்திட்ட உதவிகள் வழங்குவார். எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், அரசு உயர் அதிகாரிகள், சுற்றுலா
பயணியர் உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதற்கு தோட்டக்கலைத்துறை சார்பில், 1.50 லட்சம் மலர்களால் அலங்கார வடிவமைப்புகள், 25,000க்கும் மேற்பட்ட வண்ண மலர் தொட்டிகளால் மலர்காட்சி அமைக்கப்படுகின்றன. சுற்றுலாத்துறை சார்பில் பயணியருக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள், படகு போட்டி; சமூக நலத்துறை சார்பில் குழந்தைகள், மகளிருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். கோடை விழா நடக்கும் அனைத்து நாட்களிலும் கலை பண்பாடு, சுற்றுலாத்துறைகள் சார்பில் நடனம், இன்னிசை, நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
போக்குவரத்து மாற்றம்
அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். கோடை விழா நாட்களில், கனரக வாகனங்கள் உள்பட, 4 சக்கர வாகனங்கள் ஏற்காடு செல்ல, அஸ்தம்பட்டி, கோரிமேடு, வழியாகவும், இறங்கும்போது, ஏற்காடு, வாழவந்தி, கொட்டச்சேடு, குப்பனுார் சாலை வழியே சேலம் வரும்படி ஒரு வழிப்பாதையாக
மாற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், பிளாஸ்டிக் பாதிப்பு குறித்து சுற்றுலா பயணியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேவையான இடங்களில் தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சப்பை வழங்கப்படும்.
முன்னதாக நாளை காலை, 7:00 மணிக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை சார்பில், அடிவாரத்தில் இருந்து ஆண்கள், பெண்களுக்கு மலையேற்றம், தொடர்ந்து ஏற்காடு கலையரங்கில் சுற்றுலாத்துறை சார்பில் சேலம் சிலம்பிசை சிலம்பாட்ட குழுவினரின் புலியாட்டம், சிலம்பாட்டம், மாமல்லபுரம் விநாயகா நாட்டியாலயா கலைக்குழுவினரின் பரத நாட்டியம், மதுரை தட்சிணாமூர்த்தி குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி, 'ஸ்டெப் அப்' நடன குழுவினரின் மேற்கிந்திய நடனம் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி
தெரிவித்துள்ளார்.