ADDED : பிப் 24, 2024 03:36 AM
ஏற்காடு: ஏற்காடு, நாகலுார், அண்ணா நகரை சேர்ந்த தோட்ட தொழிலாளி ஜோஸ் மனைவி ஜெஸி, 45. நேற்று காலை, 8:45 மணிக்கு, வீடு அருகே திறந்த நிலையில் உள்ள, 45 அடி ஆழ பொது கிணற்றுக்கு துணி துவைக்க சென்றார். அங்கு தண்ணீர் எடுக்க முயன்றபோது தவறி கிணற்றில் விழுந்தார். அப்போது அந்த வழியே, பள்ளிக்கு சென்ற சிறுவன், ஜெஸி தத்தளிப்பதை பார்த்தான். உடனே ஓடி, அவரது தாயிடம் தெரிவித்தான். அவர், மக்களை அழைத்து வந்து, ஜெஸியை கிணற்றில் இருந்து மீட்டனர். உடனே ஆம்புலன்ஸூக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வந்து பார்த்தபோது, ஜெஸி இறந்துவிட்டார். ஏற்காடு போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
ஊராட்சி அலட்சியம்
இதுகுறித்து மக்கள் கூறுகையில், 'நாகலுார் ஊராட்சி நிர்வாகத்திடம், திறந்த கிணற்றுக்கு பாதுகாப்பு வலையம் போட பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ஒருவர் இறந்துள்ளார். இனியாவது உரிய பாதுகாப்பு நடவடிக்கையை, ஊராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்' என்றனர்.