Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ முத்துமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களுக்கு 'அடாவடி' வசூல்

முத்துமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களுக்கு 'அடாவடி' வசூல்

முத்துமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களுக்கு 'அடாவடி' வசூல்

முத்துமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களுக்கு 'அடாவடி' வசூல்

ADDED : மே 29, 2025 01:47 AM


Google News
ஆத்துார், சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் முத்து மலை முருகன் கோவிலில், 146 அடி உயரத்தில், முருகன் சிலை உள்ளது. அங்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்வதால், கோவில் சார்பில், 2 ஏக்கரில், 'பார்க்கிங்' வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல் முதல், ஏத்தாப்பூர் டவுன் பஞ்சாயத்து சார்பில், கோவில் நுழைவு பகுதியில் தடுப்புகள் அமைத்து, பக்தர்களின் வாகனங்களுக்கு, காருக்கு, 50 ரூபாய், வேன், 80, பஸ், 120, ஆட்டோ, 30 ரூபாய் என, வசூலிக்கின்றனர்.

அந்த ரசீதில், டவுன் பஞ்சாயத்து, 'சீல்', வாகன பதிவு எண் விபரம் இல்லை என, புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து ஆத்துாரை சேர்ந்த வக்கீல் லோகமுருகன் கூறுகையில், ''தகவல் உரிமை சட்டத்தில் அனுப்பிய மனுவுக்கு, கடந்த, 19ல், 'கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை' என தகவல் அளித்துள்ளனர். 2024 டிச., 11ல், தலைவர், செயல் அலுவலர் வெளியிட்ட ஏல அறிவிப்பு விளம்பரத்தில், முருகன் கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு, தற்போது வசூல் செய்து வரும் கட்டண விபரத்தை குறிப்பிட்டுள்ளனர். தவறான தகவல் அளித்துள்ளதால், அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்,'' என்றார்.

கோவில் நிர்வாகி ஸ்ரீதர் கூறியதாவது:

கோவில் வரை, 700 மீ., சாலையை, டவுன் பஞ்சாயத்திடம் ஒப்படைத்தபோதும், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. தினமும், 150 கார், 30 வேன், 10 பஸ்கள் என, 5,000 பக்தர்கள் வருகின்றனர். விசேஷ நாட்களில், 500 கார்கள், 100 வேன்கள், 30 பஸ்கள் என, 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகின்றனர். இந்த வாகனங்கள் நிறுத்த இடம், செக்யூரிட்டி ஏற்பாடு செய்துள்ளோம். நாங்கள் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதில்லை.

ஆனால் டவுன் பஞ்சாயத்து சார்பில், 5.75 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டதாக கூறினர். அத்தொகையை நானே செலுத்திவிடுகிறேன். பக்தர்களிடம் வசூலிக்க வேண்டாம் என்றபோதும் மறுத்துவிட்டனர். மேலும், 'பார்க்கிங்' வசதி செய்யாமல், இரவு, 9:00 மணிக்கு நடை சாத்திய பின்பும் கூட, 24 மணி நேரமும் சுங்க கட்டணம் வசூலிக்கின்றனர். கலெக்டர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்தபோது, கட்டணம் வசூலிக்கவில்லை என்கின்றனர். இங்கு கோவில் தவிர வேறு சுற்றுலா வசதிகள் இல்லாததால், சுங்க கட்டணத்தை தவிர்க்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க.,வை சேர்ந்த, டவுன் பஞ்சாயத்து தலைவர் அன்பழகன் கூறுகையில், 'சுற்றுலா வாகனங்களுக்கு வழங்கப்பட்ட ரசீதில் டவுன்

பஞ்சாயத்து, 'சீல்', வாகன பதிவு எண் குறிப்பிடாதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் நிறுத்த வசதி செய்துள்ளோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us