ADDED : பிப் 06, 2024 09:53 AM
சேலம்: சேலத்தில், காரை மோத செய்து வெள்ளி வியாபாரி கொலை செய்யப்பட்டார்.
சேலம் செவ்வாய்பேட்டை, பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர், 47; வெள்ளி வியாபாரி. இவர் கடந்த, 2ல், வழக்கம் போல காலையில் பால் வாங்கி கொண்டு வீடு திரும்பிய போது, கார் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். பின், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.
இது குறித்து விசாரணையை துவங்கிய செவ்வாய்பேட்டை போலீசார், அப்பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்ததில், திடுக் தகவல் வெளியானது. வெள்ளி வியாபாரி சங்கர் மீது மோதிய கறுப்பு நிற ஸ்கார்ப்பியோ காரில், நெம்பர் பிளேட் இல்லை. அத்துடன், விதிமுறைக்கு மாறாக, காருக்குள் இருப்பவர்கள் வெளியே தெரியாத அளவில், கார் கண்ணாடியில் கறுப்பு ஸ்டிக்கர் முழுமையாக ஒட்டப்பட்டிருந்தது.
அங்குள்ள அச்சிறுராமன் தெருவில் காலை, 6:13 மணி முதல், கார் நின்றிருந்த நிலையில், அதை, 6:14 மணிக்கு சங்கர் கடந்து சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து மெதுவாக சென்ற கார், ஆள் நடமாட்டம் இல்லாத ஏ.வி., அய்யர் தெருவில், 6:15 மணியளவில் சங்கர் நடந்து சென்ற போது, அவர் மீது பின்னால் மோதிவிட்டு, மின்னல் வேகத்தில் சென்றதும், இதில், சங்கரின் உடல் சாலையோரம் துாக்கி வீசப்பட்ட காட்சியும் பதிவாகி உள்ளது.
அதனால், போலீசாரின் சந்தேகம் ஊர்ஜிதமானது. கொலை செய்ய முயன்று, காத்திருந்து விபத்தை ஏற்படுத்தி கொன்றிருப்பதை உறுதிப்படுத்திய போலீசார், இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.