Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 3 கிலோ தங்க கட்டிகள் திருட்டில் தனிப்படை அமைப்பு போலி முகவரி கொடுத்து 'புக்கிங்' செய்தவருக்கு வலை

3 கிலோ தங்க கட்டிகள் திருட்டில் தனிப்படை அமைப்பு போலி முகவரி கொடுத்து 'புக்கிங்' செய்தவருக்கு வலை

3 கிலோ தங்க கட்டிகள் திருட்டில் தனிப்படை அமைப்பு போலி முகவரி கொடுத்து 'புக்கிங்' செய்தவருக்கு வலை

3 கிலோ தங்க கட்டிகள் திருட்டில் தனிப்படை அமைப்பு போலி முகவரி கொடுத்து 'புக்கிங்' செய்தவருக்கு வலை

ADDED : செப் 18, 2025 01:26 AM


Google News
சேலம்:வைகுந்தம் சுங்கச்சாவடியில் ஆம்னி பஸ்சில், 3 கிலோ தங்க கட்டிகள் திருடிய விவகாரத்தில், தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், போலி முகவரி கொடுத்து, முன்பதிவு செய்தவரை தேடுகின்றனர்.

கோவையை சேர்ந்த சீனிவாசன், வீட்டில் தங்க நகைகள் செய்யும் பட்டறை வைத்துள்ளார். அவரிடம் வேலை செய்து வருபவர் சங்கர், 44. இவர் செப்.15ல், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், 3 கிலோ நகைகளை, புதுச்சேரியில் உள்ள நகை கடைக்கு, கோவையில் இருந்து, 'கலைமகள்' எனும் ஆம்னி பஸ்சில் கொண்டு சென்றார்.

அன்று இரவு, சேலம் மாவட்டம் சங்ககிரி சுங்கச்சாவடி அருகே, தனியார் பேக்கரியில் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது இயற்கை உபாதை கழித்துவிட்டு, சங்கர், மீண்டும் பஸ் ஏறியபோது, நகைகள் வைத்திருந்த பையை காணவில்லை. அவர் புகார்படி, சங்ககிரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

அதில் விஜிபாபு என்பவர் கோவையில் ஏறி, சங்கர் அருகே அமர்ந்து பயணித்ததும், வைகுந்தம் வந்தபோது அவர் மாயமானதும் தெரிந்தது.

இதையடுத்து, ஏ.டி.எஸ்.பி., சோமசுந்தரம் தலைமையில், 3 இன்ஸ்பெக்டர்கள், 2 எஸ்.ஐ.,க்கள் அடங்கிய தனிப்படை அமைத்து, எஸ்.பி., கவுதம் கோயல் நேற்று உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தனிப்படையினர் கூறியதாவது:

பல்வேறு இடங்களில், 'சிசிடிவி' காட்சிகளின் பதிவு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வைகுந்தத்தில், பஸ்சில் இருந்து இறங்கியவர் குறித்தும், யாராவது சங்கரை நோட்டமிட்டு தொடர்ந்து வந்து கொள்ளையடிக்கப்பட்டதா என்றும் விசாரிக்கப்படுகிறது. விஜிபாபு, பஸ் முன்பதிவுக்கு, மொபைல் எண் ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த எண் குறித்து விசாரித்ததில், கோவையில் உள்ள இ - சேவை மைய எண் என தெரிந்தது. விஜிபாபு பெயரில் போலி முகவரி கொடுத்ததும் தெரியவந்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை பெறாமல் போலி முகவரி பதிவு செய்துள்ளதால், டிராவல்ஸ் அலுவலகத்தில் விசாரித்தோம். அப்போதும் கூட, விஜிபாபு என்பவர், 'மங்கி குல்லா' அணிந்து வந்தது தெரிந்தது. கோவை, ஈரோடு, சேலம் பகுதிகளில், விஜிபாபுவை தேடுகிறோம்.

இரு ஆண்டுக்கு முன், வைகுந்தம் சுங்கச்சாவடியில், இதேபோன்று, 3 கிலோ நகைகள் திருடுபோனது. அதில் போலீசார் விசாரித்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்களை, பெங்களூருவில் கைது செய்தனர். இந்த கொள்ளை சம்பவத்திலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளதா, விஜிபாபு யார், அவருக்கும், ஏற்கனவே சங்ககிரியில் நடந்த சம்பவத்துக்கும் தொடர்புள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us