/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாணவியின் இடது கண் பார்வை பாதிப்பு விவகாரத்தில் தலைமை ஆசிரியர் கைதுமாணவியின் இடது கண் பார்வை பாதிப்பு விவகாரத்தில் தலைமை ஆசிரியர் கைது
மாணவியின் இடது கண் பார்வை பாதிப்பு விவகாரத்தில் தலைமை ஆசிரியர் கைது
மாணவியின் இடது கண் பார்வை பாதிப்பு விவகாரத்தில் தலைமை ஆசிரியர் கைது
மாணவியின் இடது கண் பார்வை பாதிப்பு விவகாரத்தில் தலைமை ஆசிரியர் கைது
ADDED : ஜன 25, 2024 10:51 AM
ஆத்துார்: தலைவாசலில், 10 வயது மாணவியின் இடது கண் பார்வை பாதிப்பு குறித்து பெற்றோர் அளித்த புகாரில், அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், தலைவாசல் ஊராட்சி, மும்முடி எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியின், 10 வயது மகள் தலைவாசல் அரசு தொடக்கப் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த டிச., 22ல், வகுப்பறையில் இருந்தபோது, பள்ளி தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியருமான திருமுருகவேள், 57, பாடம் தொடர்பாக கேள்வி கேட்டுள்ளார். சிலர் பதில் கூறாததால், மூங்கில் குச்சியிலான பிரம்பை துாக்கி வீசியுள்ளார்.
அப்போது, 10 வயது மாணவியின் இடது கண் மீது விழுந்ததில் அலறி துடித்துள்ளார். அவருக்கு ஆத்துார், சேலம், மதுரை ஆகிய பகுதியில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இதில், மாணவியின் இடது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவர்கள் அறிக்கை வழங்கினர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள், மலைக்குறவன் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், நேற்று முன்தினம் ஆத்துார் ஆர்.டி.ஓ., மற்றும் டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக ஆர்.டி.ஓ., ரமேஷ், சேலம் கலெக்டர் கார்மேகத்துக்கு அறிக்கை வழங்கினார். கலெக்டர் உத்தரவுபடி, பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஆத்துார் டி.எஸ்.பி., நாகராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். மாணவியின் பெற்றோர் அளித்த புகார்படி, தலைமை ஆசிரியர் திருமுருகவேள் மீது, கொடுங்காயம் ஏற்படுத்துதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மூன்று பிரிவுகளில், தலைவாசல் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். இவர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், சேலம் மாவட்ட செயலராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
* நேற்று மாணவியின் பெற்றோர், 'எங்கள் மகளுக்கு, கண் பார்வை கிடைத்திட, தமிழக அரசு மூலம் சிகிச்சை அளிக்க வேண்டும்' என, சேலம் கலெக்டர் கார்மேகத்திடம் நேரில் சென்று மனு அளித்தனர்.