Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

செய்திகள் சில வரிகளில்... சேலம்

ADDED : ஜன 28, 2024 10:09 AM


Google News
கைலாசநாதர் கோவிலில்

தேரோட்ட விழா நிறைவு

தைப்பூசத்தையொட்டி தாரமங்கலம் கைலாச நாதர் கோவிலில், 3 நாள் தேரோட்டம் கடந்த, 25ல் தொடங்கியது. அன்று இரு தேர்களும், நிலையத்தில் இருந்து அண்ணா சிலை பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம், பஸ் ஸ்டாண்டில் நிலை நிறுத்தப்பட்டன. 3ம் நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள், வடம் பிடித்து தேர்களை இழுத்து வந்தனர்.

அதில் சோமாஸ்கந்தர், உமாமகேஸ்வரி சுவாமிகள், மற்றொரு தேரில் வரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரங்களில் காட்சியளித்தனர். தெற்கு ரத வீதியில் தேர்களை நிலைநிறுத்தினர். மதியம், 3:30 மணிக்கு மேல், மீண்டும் வடம் பிடித்து இழுத்துச்சென்ற பக்தர்கள், தேர்களை அதன் நிலையங்களில் நிலை நிறுத்தினர். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை செய்தபோது, கூடியிருந்த பக்தர்கள், 'அரோகரா' கோஷம் அதிர தரிசனம் செய்தனர். தொடர்ந்து, 30ல் தெப்ப தேரோட்டம், 31ல் மஞ்சள் நீராட்டு உற்சவம் நடக்க உள்ளது.

ஓங்காளியம்மன் கோவிலில்

வரும் 31ல் தேரோட்டம்

ஓமலுார், பல்பாக்கியில் உள்ள ஓங்காளியம்மன், மகமாரியம்மன் கோவிலில் தை தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த, 18ல் பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.

நாளை பொடாரியம்மன் பூஜை, சக்தி அழைத்தல், வரும், 31ல் சக்தி கரகம், பொங்கல் விழா, மாலை, 4:00 மணிக்கு ஓங்காளியம்மன் தேரோட்டம் நடக்க உள்ளது. இரவு வண்டி வேடிக்கை நடக்கும். பிப்., 1ல், மகமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடக்க உள்ளது.

அன்று இரவு வண்டி வேடிக்கை, பம்பை கிராமிய கலை நிகழ்ச்சி, 2ல் காவடி, மாவிளக்கு பூஜை, இரவு, 10:00 மணிக்கு சத்தாபரணம் நடக்க உள்ளது. 3ல் மஞ்சள் நீராட்டுதலுடன் விழா நிறைவு பெறும்.

வாக்காளர் தின

விழிப்புணர்வு பேரணி

வாக்காளர் தின விழாவையொட்டி கெங்கவல்லியில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தேர்தல் பிரிவு துணை தாசில்தார் முருகானந்தம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில், வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதன் அவசியம்; தேர்தலில் தவறாமல் ஓட்டுப்போடுவது குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி தாலுகா அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர்.

கடைவீதி வரை சென்று, மீண்டும் திரும்பினர். சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அன்புச்செழியன், ஆர்.ஐ., - வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறையினர், மக்கள் பங்கேற்றனர்.

திருமணமான 2ம் நாளில்புதுப்பெண் தற்கொலை

சேலம், பனங்காடு அடுத்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த வெள்ளி தொழிலாளி முத்து, 23. இவரது மனைவி அனிதா, 19. இவர்களுக்கு நேற்று முன்தினம் திருமணமானது. ஆனால் நேற்று காலை, வீட்டில் தனியே இருந்த அனிதா, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மணமான, 2ம் நாளில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து, கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

சாலை விதிகளை மதிக்க

இருசக்கர வாகன ஊர்வலம்

சேலம் கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷன், பைக்கர்ஸ் கிளப் சார்பில் இருசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போக்குவரத்து ஆர்.ஐ., கிட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். 100க்கும் மேற்பட்டோர், ஹெல்மட் அணிந்து இருசக்கர வாகனங்களில் புறப்பட்டனர். ஏற்காடு, அடிவாரத்தில் தொடங்கிய ஊர்வலம், அஸ்தம்பட்டி சந்திப்பில் சென்று மீண்டும் அடிவாரத்தில் வந்து நிறைவுபெற்றது. இதில் சாலை விதிகளை மதித்து வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணிய வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என வலியுறுத்தினர்.

இதுகுறித்து பைக்கர்ஸ் நிர்வாகி அருள் கூறுகையில், ''குடித்துவிட்டு வாகனத்தை இயக்கக்கூடாது. குறிப்பாக வாகனத்துக்கு தேவையான ஆவணங்களை கட்டாயம் கைவசம் வைத்திருக்க வேண்டும்,'' என்றார்.

வேலை நிறுத்த போராட்டம்

பி.எஸ்.என்.எல்., ஊழியர் முடிவு

பி.எஸ்.என்.எல்., எம்ப்ளாயிஸ் யுனியன் ஓய்வூதியர் சங்கம், ஒப்பந்த ஊழியர் சங்கம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாநில கருத்தரங்கம் சேலத்தில் நேற்று நடந்தது. குழு நிர்வாகி ராஜேசேகர் தலைமை வகித்தார். பொதுச்செயலர் அபிமன்யு, துணை பொதுச்செயலர் செல்லப்பா உள்ளிட்டோர் பேசினர்.

கருத்தரங்கில், பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு, 3வது ஊதிய

ஒப்பந்த பேச்சை முடிவு செய்தல்; ஓய்வூதியர்களுக்கு ஊதிய மாற்றத்தை அமல்படுத்தல்; ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு வசதிகளான, இ.எஸ்.ஐ., - பி.எப்., உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்., 16ல் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

துணைத்தலைவர் மோகன்தாஸ், எம்ப்ளாய்ஸ் யுனியன் சேலம் மாவட்ட செயலர் கோபால், ஓய்வூதியர் சங்க செயலர் தமிழ்மணி, ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

அத்திக்குட்டையை சீரமைக்க

ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு

மல்லுார் அத்திக்குட்டையை சுத்தம் செய்து பூங்கா அமைக்க, 3 கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் அத்திக்குட்டை உள்ளது. அதில் பல ஆண்டுகளாக சாக்கடை கழிவுநீர் தேங்கி பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் மாசடைந்துள்ளது. அத்திக்குட்டைக்கு வரும் கழிவுநீரை தேங்காமல் அப்படியே வெளியேற்றவும், பூங்கா, நடைபாதை அமைத்து சீரமைக்க நிதி வழங்கவும், மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது. சட்டசபையில் பேசியதால் அத்திக்குட்டையை சுத்தப்படுத்தி பூங்கா அமைக்க, 3.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். இந்த ஆண்டு பணி தொடங்கும் என, மல்லுார் பொதுக்கூட்டத்தில், வீரபாண்டி

எம்.எல்.ஏ., ராஜமுத்து தெரிவித்தார்.

கவர்னரை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

சேலம் கிழக்கு மாவட்ட காங்., சார்பில் ஆத்துார், உடையார் பாளையம், காந்தி சிலை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

அதில் மாவட்ட தலைவர் அர்த்தனாரி தலைமையில் கட்சியினர், 'சுதந்திர போராட்டத்தில் நேதாஜி மட்டும் பாடுபட்டதாக கவர்னர் ரவி பேசினார்.

சுதந்திரத்துக்கு பாடுபட்ட தலைவர்களின் வரலாறு குறித்து தெரியாமல் பேசுகிறார்' என, கோஷம் எழுப்பினர். ஆத்துார், நரசிங்கபுரம் நகர, ஒன்றிய, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஐ.ஜே.கே., மாநாடு அழைப்பிதழ்

வீடுகள் தோறும் வழங்க அறிவுரை

சேலம் புறநகர் மாவட்ட ஐ.ஜே.கே., ஆலோசனைக்கூட்டம், ஆத்துார் அருகே நரசிங்கபுரத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். அதில் தலைமை நிலைய செயலர் வரதராஜன் பேசியதாவது:

பெரம்பலுார் அடுத்த சிறுகனுாரில், வரும் பிப்., 17ல், ஐ.ஜே.கே., மாநாடு நடக்க உள்ளது. அதில் கட்சியினர், மக்கள் அதிகளவில் பங்கேற்க, வீடுதோறும் சென்று அழைப்பிதழ் வழங்க வேண்டும். குறிப்பாக பெண்கள் அதிகளவில் பங்கேற்க செய்ய வேண்டும்.

இந்திய அரசியலில் பெரிய அளவில் திருப்புமுனை ஏற்படுத்தும் மாநாடாக அமைய வேண்டும். ஐ.ஜே.கே., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்வதற்கு தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநில மகளிர் அணி செயலர் அமுதா, இளைஞர் அணி மாநில இணை செயலர் மோகன், தொழில்நுட்ப அணி செயலர் ரமேஷ், மாவட்ட பொருளாளர் செல்லதுரை உள்பட பலர் பங்கேற்றனர்.

புது பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு

வரும் 30ல் அகற்ற நடவடிக்கை

சேலம் புது பஸ் ஸ்டாண்டில் குத்தகைதாரர்கள், அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் இடத்தை ஆக்கிரமித்து கடை விரிப்பதால் பயணியர் நிற்க, அமர இடமின்றி சிரமங்களுக்கு ஆளாகின்றனர். சிலர் அனுமதி பெறாமல், அங்குள்ள கடைகளில் காஸ் சிலிண்டர் பயன்படுத்தி உணவு தயாரித்து விற்கின்றனர். மேலும் சுகாதாரமற்ற, காலாவதி உணவுப்பொருட்கள் விற்பனையும் தொடர்கிறது.

இதுதொடர்பாக புகார் வந்தால், மாநகராட்சி அதிகாரிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி ஒவ்வாத உணவு பொருட்களை பறிமுதல் செய்வதும் பெயரளவுக்கு நடக்கிறது.

இந்நிலையில் பயணியர் அவதி குறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில், 2 பேர் வழக்கு தொடர்ந்ததில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் புது பஸ் ஸ்டாண்ட் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, சூரமங்கலம் மண்டல உதவி கமிஷனர் ஸ்டான்லி பாபு, உரிய பாதுகாப்பு கேட்டு, கடந்த, 24ல், பள்ளப்பட்டி போலீசாருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். வரும், 30ல் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 31ல் நடக்கிறது.

இரண்டாம் தளம், அறை எண்: 215ல் காலை, 10:30 மணிக்கு கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

மாவட்ட அளவில் நடக்க உள்ள கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு, விவசாயம் தொடர்பான கோரிக்கை மற்றும் குறைகள், பிரச்னைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். மேலும், மனு மூலமாகவும் தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மரங்கள்

வெட்டி சாய்ப்பு

சேலம் - நாமக்கல் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியின்போது, 2008ல், அச்சாலை இருபுறமும் ஏராளமான மரங்கள் நடப்பட்டன. அந்த மரங்கள் நன்றாக வளர்ந்திருந்தன. இந்நிலையில் சந்தியூர் பிரிவு, மல்லுார் பிரிவில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

சந்தியூர் பிரிவு முதல் மல்லுார் பிரிவு வரை, பிரதான சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட உள்ளது.

இதனால் சாலையோரம் இருந்த மரங்கள், தற்போது அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டு வருகின்றன. பாலம், சாலை பணிக்கு பின், மீண்டும் சாலையோரம் மரக்கன்றுகள் நடப்படும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.

நிழற்குடையில்மது அருந்தும் கும்பல்

இளம்பிள்ளை அருகே நடுவனேரி, வேலகவுண்டம்பாளையத்தில் நிழற்குடை உள்ளது. அதை, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் பயன்படுத்துகின்றனர்.

நிழற்குடையை சரியாக பராமரிக்காததால், சிமென்ட் தளங்கள் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகின்றன. அங்கு சிலர் கும்பலாக அமர்ந்து மது அருந்துகின்றனர். அத்துடன் பயணியரிடம் தகராறு செய்வதால், மது அருந்தும், 'குடி'மகன்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, பயணியர் வலியுறுத்தினர்.

ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

ரூ.1 கோடி கடனால் விபரீதம்

சேலம், மாசிநாயக்கன்பட்டி, இந்திரா நகரை சேர்ந்த கெமிக்கல் நிறுவன உரிமையாளர் வெங்கடேஷ்வரன், 54. இவரது மகன் ரிஷிகேசவன், 30. இவர்கள் நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்னதாக, மகள் பூஜா, 30, படுக்கை அறிக்கையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

வெளியே சென்றுவிட்டு, வெங்கடேஸ்வரனின் மனைவி நிர்மலா, 50, மாலையில் வீட்டுக்கு வந்தபோது, 3 பேரும் இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: தற்கொலைக்கு முன் வெங்கடேஸ்வரன் எழுதிய கடிதம் சிக்கியது. அதில், அவருக்கு கடன் கொடுத்தவர்களின் பெயர், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 1 கோடி ரூபாய்க்கு மேல் பலரிடம் கடன் வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால், விபரீத முடிவை எடுத்திருக்கலாம். கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களிடம் தனித்தனியே விசாரணை நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக தொடக்க கல்வி ஆசிரியர் இயக்க

கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரதம்

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் உண்ணாவிரதப்போராட்டம், சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை வகித்தார்.

அதில் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் சந்திரசேகரன் பேசியதாவது:

தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி, சி.பி.எஸ்., திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசை பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. ஆசிரியர்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்படுகின்றன. சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது, பள்ளி கல்வி அமைச்சர், இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் முன்வந்து, 12 அம்ச கோரிக்கையை நிறைவேற்றுவோம் என்றனர். 3 மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை. அதனால் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் பிரபு, தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

பசுமை முதன்மையாளர் விருது

தகுதியானவர் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் தனி நபர், அமைப்புக்கு பசுமை முதன்மையாளர் விருது, 100 பேருக்கு வழங்கி, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் பண முடிப்பு வழங்க உள்ளது.

சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, விழிப்புணர்வு, பாதுகாப்பு, பசுமை தயாரிப்பு, பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வு, நிலைத்தகு வளர்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, நீர்நிலை பாதுகாப்பு, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவு மறுசுழற்சி, கட்டுப்பாடு போன்ற விழிப்புணர்வுகளை, மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நிறுவனம், கல்வி நிறுவனம் குடியிருப்போர் நலச்சங்கம், தனிநபர், உள்ளாட்சி அமைப்பு தொழிற்சாலைகளுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பத்தை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில், www.tnpcb.gov.in பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலெக்டர் தலைமையிலான குழு, விருதாளர்களை தேர்வு செய்யும். ஏப்., 15 விண்ணப்பிக்க கடைசி நாள்.

மேலும் தகவல் பெற, சேலம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us