ADDED : ஜன 11, 2024 10:57 AM
கோவை - தாம்பரம்
இடையே சிறப்பு ரயில்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் ஜன., 16, 17 இரவு, 8:45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை, 5:20 மணிக்கு தாம்பரத்தை அடையும். மறுமார்க்கத்தில் ஜன., 17, 18 காலை, 7:30க்கு புறப்படும் சிறப்பு ரயில், மாலை, 4:30 மணிக்கு கோவையை அடையும். இந்த ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும் என, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சன்னாசி கோவிலில்
பால்குட ஊர்வலம்
ஆத்துார் அருகே ஈச்சம்பட்டி சன்னாசி கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழாவையொட்டி, பால் குட ஊர்வலம் நேற்று நடந்தது. 100க்கும் மேற்பட்ட பெண்கள், பால் குடம் எடுத்து வந்து, சுவாமிக்கு அபிேஷகம் செய்தனர். சுவாமி புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
'ஸ்மார்ட் மீட்டர்' திட்டம்மா.கம்யூ., எதிர்ப்பு
மா.கம்யூ., கட்சி சார்பில், ஆத்துார் கோட்ட மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. ஆத்துார் தாலுகா செயலர் முருகேசன் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், விவசாயிகள், மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், 'நாடு முழுதும், 'ஸ்மார்ட் மீட்டர்' பொருத்தும் திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதை நடைமுறைப்படுத்தக் கூடாது' என கூறப்பட்டுள்ளது.
பேப்பர் குடோனில் தீ 2 மாதத்துக்கு பின் வழக்கு
சேலம், சோளம்பள்ளத்தை சேர்ந்தவர் சிவகணேஷ், 46. மல்லமூப்பம்பட்டியில் பேப்பர் கம்பெனி, குடோன் வைத்துள்ளார். கடந்த நவ., 7ல் குடோனில் தீப்பற்றி எரிந்தது. சூரமங்கலம் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். எனினும் பொருட்கள், மெஷின்கள் எரிந்தன. இதுகுறித்த புகாரில், போலீசார், 2 மாதத்துக்கு பின், தீ விபத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமானது என, நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விஜயகாந்த் மறைவுதே.மு.தி.க.,வினர் ஊர்வலம்
தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் மறைவையொட்டி, அக்கட்சியின் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் மவுன ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வெள்ளாண்டிவலசு மாரியம்மன் கோவில் அருகே புறப்பட்ட ஊர்வலம், நைனாம்பட்டி வழியே பஸ் ஸ்டாண்டை அடைந்தது. அங்கு விஜயகாந்த் படத்துக்கு மலர்துாவி, கட்சியினர் மரியாதை செலுத்தினர். மகளிர் அணி செயலர் மாலதி, மாவட்ட பொருளாளர் தங்கமணி உள்பட பலர் பங்கேற்றனர்.
பெண்ணிடம் சீண்ட முயற்சி
பட்டதாரி மீது வழக்கு
தலைவாசல் அருகே, 21 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நேற்று முன்தினம் வீட்டில் தனியே இருந்தார். நாவக்குறிச்சியை சேர்ந்த, எம்.எஸ்சி., பட்டதாரி வாலிபரான சிவா, 33, என்பவர், அந்த பெண்ணை, பலாத்காரம் செய்ய முயன்றார். பெண் கூச்சலிட்டதால், அப்பகுதி மக்கள் வர, வீட்டில் இருந்து சிவா வெளியே ஓடி தப்ப முயன்றார். அவரை மக்கள், விரட்டிச்சென்று பிடிக்க முயன்றனர். அப்போது தடுமாறி விழுந்த சிவா படுகாயமடைந்தார். வீரகனுார் போலீசார், அவரை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
225 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து
சேலம் போக்குவரத்துத்துறை கட்டுப்பாட்டில் சேலம் கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆத்துார், சங்ககிரி, மேட்டூர், தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், ஓமலுார், வாழப்பாடி, பாலக்கோடு, அரூர் ஆகிய, பகுதி நேர அலுவலகங்கள் செயல்படுகின்றன. கடந்த டிசம்பரில், 11 அலுவலக பகுதிகளில் வட்டார போக்கு
வரத்து அலுவலர் தலைமையில் குழுவினர், 1,621 வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர். அதில் சாலைவிதி மீறிய, 225 பேரின் ஓட்டுனர் உரிமம்
தற்காலிக ரத்து செய்யப்பட்டது.
போதையில் வாகனம் ஓட்டிய, 47 பேர், மொபைலில் பேசியபடி ஓட்டிய, 42 பேர், அதிவேகத்தில் சென்ற, 36 பேர், சிக்னலை தாண்டிய, 33 பேர், விபத்து உயிரிழப்பு ஏற்படுத்திய, 25 பேர், அதிக ஆட்கள் ஏற்றிய, 27 பேர் உள்ளிட்டவை அடங்கும்.
தவிர அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றியது உள்ளிட்ட விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு, 53.26 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, அதில், 27.70 லட்சம் ரூபாய் உடனே வசூலிக்கப்பட்டது. மேலும், 9.35 லட்சம் ரூபாய் சாலை வரியும் வசூலானது. அத்துடன் எப்.சி., - பர்மிட் இல்லாத, 177 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது என, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடுதல் வகுப்பறை பணி தொடக்கம்
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம், பழைய சூரமங்கலம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 68 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறை கட்டடங்கள்; மாநகராட்சி
நடுநிலைப்பள்ளியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல்
வகுப்பறை; அஸ்தம்பட்டி மண்டலம், காமராஜர் காலனியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில், 27 லட்சம் ரூபாய் மதிப்பில், கட்டட பராமரிப்பு, சமையல் அறையுடன் கூடிய கூடுதல் அறை, கழிப்பறை உள்ளிட்டவை கட்டுவதற்கு, மாநகராட்சி கல்வி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கு ஒப்பந்தம் விடப்பட்டு அதன் பணிகளை, மேயர் ராமச்சந்திரன், சேலத்தில் நேற்று தொடங்கி வைத்தார். உதவி கமிஷனர் ஸ்டாலின்பாபு உள்பட பலர்
பங்கேற்றனர்.
வாழப்பாடியில் நாளை
தி.மு.க., கூட்டம்
தி.மு.க.,வின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் அறிக்கை:
சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், வரும், 12(நாளை) காலை, 10:00 மணிக்கு, வாழப்பாடியில் உள்ள சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகமான, தளபதி மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்க உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி தலைமை வகிக்க உள்ளார்.
அதில், 20ல் சேலம் வரும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வருகை குறித்தும், 21ல் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடக்க உள்ள, இளைஞர் அணி மாநில மாநாடு குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளது.
அதனால் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலர்கள், முன்னாள், இன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தேர்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சி துணை அமைப்புகளான அனைத்து சார்பு அணிகளின் மாநில, மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பங்கேற்க வேண்டும்.
லாரியில் துாங்கிய டிரைவரிடம்
மொபைல் போன் திருட்டு
மேட்டூர் அருகே உள்ள பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், 50, லாரி டிரைவரான இவர், நேற்று முன்தினம் அதிகாலை, கோவையில் இருந்து சேலம் நோக்கி லாரியை ஓட்டி வந்தார். உத்தமசோழபுரம் அருகே வந்தபோது, லாரியை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு துாங்கினார். அப்போது, அவரது மொபைல் போனை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இதுகுறித்து அவர் புகார்படி சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தறி தொழிலாளி மீது
'போக்சோ' வழக்கு
வீரபாண்டி அருகே இனாம் பைரோஜியை சேர்ந்த கண்ணன் மகன் ஜெகன், 22. இவர் பிளஸ் 2 முடித்துவிட்டு தொலைதுார கல்வி மூலம், பி.காம் படிக்கிறார். ஆட்டையாம்பட்டி அருகே தறி பட்டறையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிகிறார். அதே பகுதியை சேர்ந்த, 17 வயது மாணவியை காதலித்துள்ளார். கடந்த, 8 இரவு, அவர் மாணவியுடன் தலைமறைவானார். இதுகுறித்து மாணவியின் தாய் புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார், இருவரையும் தேடினர். இந்நிலையில் காதலர்கள், ஈரோட்டில் திருமணம் செய்து கொண்டு நேற்று இனாம் பைரோஜிக்கு வந்தனர். கண்ணன், அவரது மகன் ஜெகனை, ஆட்டையாம்பட்டி போலீசில் ஒப்படைத்தார். பின், மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ததால், அவர் மீது, 'போக்சோ' வழக்குபதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் மாணவியை அரசு காப்பகத்துக்கு அனுப்பினர்.
பெரியார் பல்கலைக்கு
இன்று கவர்னர் வருகை
சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில் அனுமதியின்றி, 'பூட்டர் பவுண்டேஷன்' தொடங்கிய புகாரில், துணைவேந்தர் ஜெகநாதன் உள்பட, 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். அதில் துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளிவந்தார். இந்நிலையில், தமிழக கவர்னர் ரவி, சென்னையில் இன்று விமானம் மூலம் புறப்பட்டு, மதியம், 12:20க்கு சேலம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கோவை செல்ல உள்ளார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கவர்னர், கோவை செல்லும் முன், பெரியார் பல்கலையில் அவருக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்று, பின் கோவை செல்வார்' என்றனர். ஆனால் நிபந்தனை ஜாமினில் வந்த துணைவேந்தரை, கவர்னர் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஊட்டி மலை பாதையில்
விடுமுறை கால சிறப்பு ரயில்
ஊட்டி மலைபாதையில், விடுமுறை கால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி மலைத்தொடரில், ரயில் பயணம், சுற்றுலா பயணிகளிடையே பிரசித்தி பெற்றது. தற்போது விடுமுறை தினங்களால் பயணிகளிடம் ஆர்வம் அதிகமாக உள்ளதால், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. உதகமண்டலம்-குன்னுார் விடுமுறைக்கால சிறப்பு ரயில், ஜனவரி 18, மாலை 4:45 க்கு கிளம்பி, 5:55 க்கு குன்னுார் சென்றடையும். குன்னுார்-உதகமண்டலம் விடுமுறைக்கால சிறப்பு ரயில், ஜன., 21, காலை 8:20 மணிக்கு கிளம்பி, 9:40 மணிக்கு உதகமண்டலம் சென்றடையும். இந்த ரயில்களில், முதல் வகுப்பு, 80 சீட்கள், இரண்டாம் வகுப்பு, 140 சீட்கள் உள்ளன.
உதகமண்டலம்-மேட்டு
பாளையம் விடுமுறைகால சிறப்பு ரயில், ஜனவரி 21, காலை, 11:25 க்கு உதகமண்டலத்திலிருந்து கிளம்பி, அன்று மாலை, 4:20 க்கு மேட்டுபாளையம் சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.